``வயதானவன் என்றுகூட பார்க்காமல் அடித்தனர்!'' - தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் வேதனை! | bjp members attacked auto driver in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (17/09/2018)

கடைசி தொடர்பு:17:59 (17/09/2018)

``வயதானவன் என்றுகூட பார்க்காமல் அடித்தனர்!'' - தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர் வேதனை!

சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பின்போது, பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாகத் தாக்கினர். 

தமிழிசையிடம் கேள்வி கேட்டவருக்கு அடி

சைதாப்பேட்டையில் நடந்த இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருப்பவர்கள் செய்து வரும் அடவடிச் செயல்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குமுறி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கதிர் என்பவர், 'பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே!' என்று கேள்வி எழுப்பினார். 

ஆட்டோ டிரைவரின் கேள்வியைக் கேட்டும் கேட்காததுபோல தமிழிசை இருந்தார். ஆட்டோ டிரைவர் விடவில்லை. மீண்டும் அவர் கேள்வி எழுப்ப, தமிழிசையின் அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்குக் கோபம் வந்தது. வயதானவரை ஒதுக்குப்புறமாகக் கொண்டு சென்று கடுமையாகத் தாக்கினர். தந்தை வயதில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்படுவதை அறிந்தும் கண்டும் காணாததுபோல தமிழிசை சம்பவ இடத்தைவிட்டு நகர்ந்தார். 

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிர், ''பெட்ரோல் விலை உயர்வால் குடும்பத்தை நடத்துவதே பாரமாக இருக்கிறது. தினசரி வருமானத்தில் பெரும் பகுதி பெட்ரோலுக்கே செலவழிக்க வேண்டியது இருக்கிறது. பெட்ரோல் விலை குறித்து கேட்டால் வயதானவன் என்றுகூட பார்க்காமல் அடிக்கிறார்கள்'' என்று வேதனையுடன் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க