காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு! | Judges inspection in Kanchipuram Ekambaranathar Temple

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:00:00 (18/09/2018)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு!

மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின் அடிப்படையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். 

காஞ்சிபுரம்


தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள், சிலைகளின் எண்ணிக்கை, பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அந்தந்த பகுதி மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத் தலைமை நீதிபதிகள் வசந்த லீலா மற்றும் கருணாநிதி ஆகியோர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், நீதிபதிகள் ஆய்வு
கோயிலில் மேற்கொள்ளப்படும் கணக்கு வழக்குகள், சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை, சிலைகளின் எண்ணிக்கை, கோயிலின் வருவாய் கணக்குகள், குடிநீர் வசதி, கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட மாடுகளின் எண்ணிக்கை மற்றும் பராமரிப்பு கணக்குகள், கோயில் சுகாதார பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கையை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒப்படைக்க உள்ளனர். மேலும் நாளை  (19.09.2018) காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் ஆய்வு செய்ய உள்ளனர். ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட சிலைகளில் எழுந்த புகார் குறித்து நீதிபதிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அந்தச் சிலைகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்துவருகிறார். மேலும் நாங்கள் செய்த ஆய்வறிக்கை குறித்து மதுரை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்போம்” என்றனர்.