`பாதுகாப்பு இல்லா சுற்றுலாத்தலம், மாற்றுத்திறனாளிகள் சிரமம்’ - சுற்றுலாத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு | Tourism Difficulty for Physically Challenged Person

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (18/09/2018)

கடைசி தொடர்பு:07:29 (18/09/2018)

`பாதுகாப்பு இல்லா சுற்றுலாத்தலம், மாற்றுத்திறனாளிகள் சிரமம்’ - சுற்றுலாத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழக சுற்றுலாத்தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கில் தமிழக சுற்றுலா துறை கூடுதல் தலைமைச் செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது .

சுற்றுலா

மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர்  மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்தார் அதில் ``தான் ஒரு மாற்றுத்திறனாளி, நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு குளிக்கச் சென்றபோது அங்கு தன்னால் குளிக்க இயலவில்லை பாதுகாப்பு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும்  பெரும் ஏமாற்றம் அடைந்ததாகவும்  தெரிவித்துள்ளார். எனவே, மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016-ல் அத்தியாயம் 5-ல் பிரிவு 29-ன் படி மாற்றுத்திறனாளிகள் குற்றால அருவிகளில் சுலபமாக குளிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக சென்றுவர உரிய வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என தனது பொது நல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தமிழக சுற்றுலாத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.