`பலமுறை சொல்லியும் பலனில்லை' - காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய தோட்டக்கலைத்துறையினர்! | government employees starts the fasting protest

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:09:00 (18/09/2018)

`பலமுறை சொல்லியும் பலனில்லை' - காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய தோட்டக்கலைத்துறையினர்!

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நிர்வாகப் பணியிடம் மற்றும் அமைச்சுப் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னை சேப்பாக்கத்திலுள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம்

மாவட்டம் முழுவதிலும் உள்ள தோட்டக்கலைத்துறையில் நிர்வாகப்பணிகளைப் பார்க்கவும், அதன் நிதிகளை முறையாகக் கையாளவும் ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் அனுமதிக்க அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை இப்பணியிடம் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே, இதைக் கருத்தில்கொண்டு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலகங்களுக்கு ஒரு நிர்வாக அலுவலர் அனுமதிக்கக் கோரியும், வட்டார அளவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம், படிகள் வழங்கவும், அனைத்து திட்டங்களுக்கான பட்டியல்களை வழங்கவும் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணியைச் செய்ய அமைச்சுப்பணியிடங்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்குக் குறைந்தபட்ச அமைச்சுப்பணியிடம் அமைக்கக் கோரி இப்போராட்டமானது நடைபெற்று வருகிறது.

இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் இரா.பன்னீர்செல்வம் கூறுகையில், ``வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் மத்திய அரசு, மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகக் கையாள்வதற்கும், நிர்வாகம் செய்வதற்கும் நிர்வாகம் தரப்பிலான அமைச்சுப்பணியிடங்கள் போதுமானதாக வழங்கப்படவில்லை.

இரா.பன்னீர்செல்வம்இதனால், நாங்கள் குறைந்த அளவில் பணியிடங்களை நிரப்பக் கேட்டுவந்துள்ளோம். 2008-ல் தோட்டப்பயிர்களை அதிகரிக்க மாவட்டந்தோறும் துணை இயக்குநர்களை அரசு நியமித்தது. ஆனால், அந்த மாவட்டத்தின் தோட்டக்கலை நிர்வாகப்பணிகளைப் பார்க்க நிர்வாக அலுவலர் பணி அவசியம். இதற்காகக் கடந்த பத்து வருடமாகச் சிறிய அளவிலான போராட்டங்கள், எழுத்துபூர்வமான கோரிக்கைகள் என்று பல வழிமுறைகளில் எடுத்துக்கூறினோம். செயலரிடம் பேசினோம். வேளாண்மைத்துறை அமைச்சரின் தொகுதியிலும் சென்று உண்ணாவிரதம் நடத்தியுள்ளோம். 

எல்லோரும் உங்களுடைய கோரிக்கைகள் நியாயமானதுதான்; செய்து தருகிறோம் என்றார்கள். தற்போது, நிதித்துறை ஒப்புக்கொள்ளவில்லை. என்று கூறி இழுத்தடிக்கின்றனர். நிர்வாக அலுவலர் பணியிடமே இல்லை என்பதால், குறைந்தபட்சம் ஒரு பணியிடம் கொடுங்கள் என்று கேட்கிறோம். அதேபோல வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில்தான் எல்லா திட்டங்களுக்கான வரவு, செலவு கணக்குகள் பார்க்கப்படுகிறது. அங்கு வரவு, செலவு பார்க்கக் குறைந்தபட்ச ஆட்கள் தேவை. ஒரு சூப்பிரண்ட், ஒரு அஸிஸ்டண்ட், ஒரு ஜூனியர் அஸிஸ்டண்ட் என்று தேவைப்படும். இதை நிரப்பத்தான் அரசைக் கேட்கிறோம். அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாத வகையில் போராட்டம் நடத்தலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இருந்தாலும் காவல்துறையினர் நெருக்கடி தந்தவண்ணம் உள்ளனர். நியாயமான, நீண்டகாலப் போராட்டத்துக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று தெரியவில்லை" இவ்வாறு கூறினார்.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கும் சூழலிலும், வேளாண்மை மற்றும் தோட்டப்பயிர் துறைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும் அரசின் பதிலுக்காக இந்தப் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக காலவரையற்று நடக்க இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களின் பிரதிநிதிகளாக சுமார் 20 பேர் கலந்துள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.