வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (18/09/2018)

கடைசி தொடர்பு:11:39 (19/09/2018)

`இனிமேலும் உயிரோடு இருப்பேனானு தெரியல; உண்மையச் சொல்றேன்!' - நடிகை நிலானி கண்ணீர்

நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவர் குறித்து  பரபரப்பான தகவல்களை நடிகை நிலானி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நடிகை நிலானி

நடிகை நிலானியைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. காந்தியின் மரணம் குறித்து நிலானியிடம் விசாரணை நடத்த கே.கே.நகர் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில், நடிகை நிலானி, இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் விமலாவைச் சந்தித்து அவர் பேசினார். பிறகு, காந்தியின் மரணம் குறித்து விளக்கம் அளித்த நிலானி, அங்கிருந்து சென்றுவிட்டார். 

இதுகுறித்து நிலானியிடம் பேச போனில் அவரைத் தொடர்பு கொண்டாம். போனை எடுத்த அவர், அழுதுகொண்ட `நான் இனிமேலும் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை. அதற்கு முன் உங்களிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்' என்று கூறினார். அவருக்கு ஆறுதல் கூறினோம். சில நிமிட அமைதிக்குப் பிறகு நிலானி தொடர்ந்தார். 

``கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், காந்தி என்கிற லலித்குமாருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்துவருகிறேன். என்னிடம் கார்கூட கிடையாது. மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்துவரும் என்னிடம், லலித்குமார் அன்பாகப் பேசினார். நிறைய உதவிகளைச் செய்தார். அப்போது ஒருநாள், `ஐ லவ் யூ' என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. யோசித்து பதில் சொல்கிறேன் என்று கூறினேன். ஆனால், லலித்குமார் என்னை தொடர்ந்து வற்புறுத்தினார். அதனால் நானும் சம்மதம் தெரிவித்தேன். இது, லலித்குமாரின் குடும்பத்தினருக்கும் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவரும் ஓகே என்று கூறினார். 

 லலித்குமார்

இந்தச் சமயத்தில் லலித்குமார் குறித்த உண்மைகள் எனக்குத் தெரியவந்தது. அதுகுறித்து அவரின் சகோதரி, சகோதரரிடம் கூறினேன். அப்போது அவர்கள் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு என்று கூறினர். இதனால் லலித்குமாரிடமிருந்து விலகத் தொடங்கினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. மாறாக எனக்கு பல வகையில் டார்ச்சர் கொடுக்கத் தொடங்கினார். என் அனுமதியில்லாமல் வீட்டுக்குள் வந்து டார்ச்சர் செய்யத் தொடங்கினார். அவரிடமிருந்து விலக முடியாமல் தவித்தேன். டிசம்பர் மாதத்தில் என்னை சரமாரியாகத் தாக்கினார். மயங்கி விழுந்த என்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு, போலீஸ் நிலையத்தில் லலித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, அவரின் குடும்பத்தினருக்காக வழக்கை வாபஸ் பெற்றேன். 

அதன் பிறகு கடந்த ஒராண்டாக என்னை லலித்குமார் எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. இதனால் நிம்மதியாக இருந்தேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் என்னை போலீஸார் கைது செய்தபோது ஜாமீனில் எடுக்க லலித்குமார் உதவினார். அதன் பிறகு அவரின் டார்ச்சர் தொடர ஆரம்பித்தது. என் குழந்தைகளைக்கூட அடிக்கத் தொடங்கினார். அவர்களை வைத்து என்னை மிரட்டினார். இந்தச் சமயத்தில்தான் கடந்த 10 நாளுக்கு முன் லலித்குமார், என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். ஒரு நாள் மட்டும் நீ என் விருப்பப்படி நடந்துக்கொள். நான் செய்யும் எந்தச் செயலுக்கும் நீ மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார். குழந்தைகளுக்காக நான் அதை ஒப்புக்கொண்டேன். பஸ்சில் தென்மாவட்டத்துக்குச் சென்றோம். பஸ்சில் வைத்தே எனக்கு மெட்டி அணிவித்தார். அப்போது என்னுடைய செல்போனில் அதை வீடியோவாக எடுத்தார். முதலில் நான் அதற்கு மறுத்தேன். ஆனால், என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக லலித்குமாரால் பல டார்ச்சர்களை அனுபவித்து இருக்கிறேன். குழந்தைகளுக்காகத்தான் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன். திடீரென ஒருநாள் என் வீட்டுக்குள் நுழைந்த லலித்குமார், பின்பக்கத்திலிருந்து எனக்குத் தாலி கட்டினார். அதை நான் அறுத்து எறிந்துவிட்டேன். இதுபோல சொல்ல முடியாத பல டார்ச்சர்களை நான் லலித்குமாரால் அனுபவித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால், என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன" என்றார் கண்ணீர்மல்க. 

லலித்குமாரின் சகோதரர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அவரிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அதுபோல சகோதரி ஊட்டியில் இருக்கிறார். அவரை தொடர்புகொண்டபோது அவரும் பதிலளிக்கவில்லை. இருவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.