வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (19/09/2018)

கடைசி தொடர்பு:12:00 (19/09/2018)

`அங்கு நடந்து போவது ஸ்வாதியும் கோகுல்ராஜும்தான்!’ - திருப்பத்தைக் கொடுத்த வாக்குமூலம்

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் தாயாரின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் ஆஜராகி வருகிறார்கள்.

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி ஸ்வாதி கடந்த 10.9.2018-ம் தேதி ``கோகுல்ராஜ் என்னோடு கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால் கோகுல்ராஜ் என்பவர் யார் என்று எனக்குத் தெரியாது'' என்று  தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்த நிலையில், நேற்று (18.9.2018) கோகுல்ராஜ் - ஸ்வாதியின் நண்பர் கார்த்திக்ராஜா, ``ஸ்வாதியும், கோகுல்ராஜும் கோயிலுக்குப் போனார்கள் என்றதாலும், அங்கு பதிவான சிசிடிவி காட்சியில் ஸ்வாதியையும், கோகுல்ராஜையும் அடையாளம் காட்டியதாலும் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கார்த்திக்ராஜா வாக்குமூலத்தில் இருந்து...

24.6.2015 அன்று காலை கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் எனக்கு போன் செய்து கோகுல்ராஜ் காணவில்லை. அவனை நீ பார்த்தாயா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உங்க நண்பர்களிடம் விசாரித்துச் சொல்லுங்கள் என்றார். அதையடுத்து ஸ்வாதிக்குப் போன் பண்ணினேன். ஸ்வாதி போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. அவருடைய அம்மா நம்பருக்கு போன் பண்ணினேன். ஸ்வாதியின் அம்மா போனை எடுத்தாங்க. ஸ்வாதியிடம் போனை கொடுக்கச் சொன்னேன்.

பிறகு ஸ்வாதியிடம் ``கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன் பேசினார். கோகுல்ராஜை காணவில்லையாம். உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டேன். அதற்கு ஸ்வாதி ``ஆமாம். நானும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோயிலுக்குப் போனோம். அங்கு பிரச்னை ஆயிடுச்சு. யுவராஜ் என்பவரும் அவருடைய ஆட்களும் எங்க கைப்பேசியை பிடுங்கிட்டு,  என்னை ரெண்டு பேரு கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றார் ஸ்வாதி. கோகுல்ராஜை யுவராஜும், அவருடைய ஆட்களும் கூட்டிட்டுப் போனதாக என்னிடம் ஸ்வாதி சொன்னார். அதையடுத்து நானும் ஸ்வாதியும் திருச்செங்கோடு சென்று கோகுல்ராஜ் குடும்பத்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்'' என்று கூறினார்.

இதையடுத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சியை காவல்துறை அதிகாரிகள் கார்த்திக்ராஜாவிடம் போட்டுக்காட்டினர். அந்தக் காட்சியில்  கோகுல்ராஜையும் ஸ்வாதியையும் அவர் அடையாளம்காட்டினார்.  எனவே, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.