வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:45 (19/09/2018)

` துரைமுருகன் ஏன் அப்படிப் பேசினார்?!'  - ஸ்டாலினைச் சீண்டிய கே.என்.நேரு

தி.மு.க நிர்வாகிகள் சிலர், ' இந்தக் கேள்வி தம்பிதுரைக்கா...தலைவர் ஸ்டாலினுக்கா?' எனத் திருப்பிக் கேட்டனர். அதேபோல், கடம்பூர் ராஜுவுக்கு எதிரான துரைமுருகனின் பேட்டியும், ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை

` துரைமுருகன் ஏன் அப்படிப் பேசினார்?!'  - ஸ்டாலினைச் சீண்டிய கே.என்.நேரு

அ.தி.மு.க அரசுக்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது தி.மு.க. ' ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றதைவிடவும் துரைமுருகன், கே.என்.நேரு பேச்சால் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் ஸ்டாலின். இந்தக் கோபத்தை நேற்று நேரடியாக வெளிப்படுத்திவிட்டார்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், அ.தி.மு.க அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தி.மு.க. சேலத்தில் நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பேசிய ஸ்டாலின், ' நான் தலைவரான பிறகு கலந்துகொள்ளும் முதல் போராட்டம் இது. சேலத்தில் போராட்டக் களத்தை அமைப்பது என விருப்பப்பட்டுத்தான் தேர்வு செய்தேன். தேர்தல் வரும்வரையில் இந்த ஆட்சி இருக்கும் எனக் கருத வேண்டாம். அதற்கு முன்பே அப்புறப்படுத்தப்படும் என்ற உணர்வு மக்களுக்கு உள்ளது. 400 கோடியில் பருப்பு ஊழல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 200 கோடி ஊழல், போக்குவரத்தில் 300 கோடி ஊழல், 1000 கோடியில் முட்டை ஊழல், 89 கோடியில் வாக்கி டாக்கி ஊழல் நடந்திருக்கிறது. டி.வி. நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியைப் போல ஊழல் போட்டி நடத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல 33 அமைச்சர்களும் சிறந்த ஊழல்வாதிகள்' எனக் கொந்தளித்தார். 

துரைமுருகன்சேலத்தில் ஸ்டாலின் நிகழ்த்திய உரைவீச்சு அதிர்வலையை ஏற்படுத்துவதற்குள், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடம்பூர் ராஜு, ' கருணாநிதிக்கு இடம் அளித்த விவகாரத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம். ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும். ஆனால், தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது நாங்கள் போட்ட பிச்சை' எனப் பேசினார்.

இந்தப் பேச்சை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. நேற்று முழுவதும் கடும் கோபத்தில் இருந்தவர், உடனே துரைமுருகன் அழைத்து, ' கடம்பூர் ராஜு பேச்சைக் கண்டிக்கும் வகையில் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுங்கள்' என உத்தரவிட்டார். இதையடுத்து, அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், '  நீங்கள்தான் இடம் தராமல் எங்களுக்குத் தொல்லை தந்தீர்கள். நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடித்தான் மெரினாவில் இடத்தை பெற்றோம். அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஓர் அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல' என்றார். அவரது இந்தப் பேட்டி, ஸ்டாலினுக்குத் திருப்தியைத் தரவில்லை. இந்த அதிருப்தியை நிர்வாகிகளிடமும் அவர் வெளிக்காட்டியிருக்கிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், " அ.தி.மு.க அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தைவிடவும், துரைமுருகன், நேரு ஆகியோரின் பேச்சுக்களால் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் ஸ்டாலின். தஞ்சாவூருக்குப் பரோலில் சசிகலா வந்தபோது, அவரை நேரில் சந்தித்துப் பேசினார் கே.என்.நேரு. இந்த சந்திப்பு அரசியல்ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தவே, ' சசிகலா குடும்பத்தோடு உங்களுக்கு என்னய்யா தொடர்பு, எல்லோரும் கேள்வி கேட்பது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள்?' என நேருவிடம் கோபப்பட்டார் ஸ்டாலின். இதற்குப் பதில் சொல்லும்விதமாக நேற்றைய திருச்சி கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார் நேரு. அவர் பேசும்போது, ' பலமுறை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, விமானம் மற்றும் விமான நிலையங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறார் தம்பிதுரை. இதனால், தி.மு.க-வுக்கும் தம்பிதுரைக்கும் தொடர்பு உள்ளது என்று கூற முடியுமா?' எனக் கேள்வி எழுப்பினார். அதாவது, 'விமான நிலையத்தில் சந்தித்துப் பேசியது மட்டும் நல்ல உறவா?' எனப் பொருள்படும்படி பேசிவிட்டார் நேரு. இதனைக் கலாய்த்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், ' இந்தக் கேள்வி தம்பிதுரைக்கா...தலைவர் ஸ்டாலினுக்கா?' எனத் திருப்பிக் கேட்டனர். அதேபோல், கடம்பூர் ராஜுவுக்கு எதிரான துரைமுருகனின் பேட்டியும், ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை" என விவரித்தவர், 

திருச்சி கே.என்.நேரு

" கருணாநிதி ஆக்டிவ்வாக இருந்தபோது, அவர் நினைப்பதைச் செயல்படுத்தக் கூடிய நிர்வாகிகள் இருந்தார்கள். தி.மு.கவுக்கு எதிராகப் பேசும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க, அடிமட்ட நிர்வாகிகளை நன்றாகவே அவர் பயன்படுத்திக் கொள்வார். இதில் ஸ்டாலின் சற்று கவனத்தைச் செலுத்த வேண்டும். ' சமாதி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் நீதியரசராக இருக்கும் குலுவாடி ரமேஷ் என்ற கன்னடர்தான் தீர்வைக் கொடுத்தார். உலகத் தமிழர்களே கருணாநிதியின் மறைவில் துக்கத்தில் இருக்கின்றனர். உள்ளூர் தமிழனான உங்களுக்குத்தான் மனம் வரவில்லை' எனத் துரைமுருகன் பேசியிருக்க வேண்டும். அவர் அப்படிப் பேசத் தவறிவிட்டார். இந்தக் கோபத்தை ஸ்டாலினும் வெளிப்படுத்தினார்' என்றவர், இறுதியாக பேசும்போது, 

"தனித்தன்மையோடு செயல்படுவதன் அடையாளம் என்பது, யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிவதில்தான் இருக்கிறது. அதை சரிவரச் செயல்படுத்துவதில் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும். தி.மு.கவில் தலைவர் பதவிக்குப் போட்டியில்லாமல் இருக்கலாம். ஆனால், ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் களத்தில் ஏராளமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள். தினகரனின் செயல்பாடு, தமிழிசையின் செயல்பாடு என ஒவ்வொன்றையும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற தலைவர்களின் செயல்பாடுகளையும் ஸ்டாலினின் செயல்பாடுகளையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படைத் தளபதிகளை சரிவரக் கையாள வேண்டும் என்ற உண்மையை நேற்றைய நாள் உணர்த்தியது" என்றார் ஆதங்கத்துடன்.