வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:21 (19/09/2018)

`லலித் இறந்துட்டார். அவரோட வாட்ஸ்அப்ல....!?' - நிலானியின் சந்தேகம்

 லலித் குறித்து பேசும் நடிகை நிலானி

சென்னை கே.கே.நகர் பகுதியில் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் இறந்துவிட்டார். ஆனால், இன்னமும் அவரின் வாட்ஸ்அப் மட்டும் ஆன் லைனில் இருக்கிறது என்று நடிகை நிலானி தெரிவித்துள்ளார். 

நடிகை நிலானியை திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், சில நாளுக்கு முன் கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு, நடிகை நிலானியும் காந்தி லலித்குமாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நடிகை நிலானியின் காலில் காந்தி லலித்குமார் மெட்டி அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த நிலையில் நடிகை நிலானி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, தன்னைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதைத் தடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுத்தார். அதோடு காந்தி லலித்குமாருடன் பழகியது உண்மைதான். ஆனால், அவரை திருமணம் செய்யவில்லை என்று கூறினார். தொடர்ந்து, தன் தரப்பு நியாயத்தை மீடியாவிடமும் நடிகை நிலானி கூறினார். அப்போது காந்தி லலித்குமார் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். இந்த நிலையில், நடிகை நிலானியிடம் இன்று காலை போனில் பேசினோம். அழுதுகொண்டே அவர், இவ்வளவு அவமானத்தைச் சந்தித்த நான் ஏன் உயிரோடு வாழணும் என்ற விரக்தியோடு பேசினார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

காந்தி லலித்குமாரிடமிருந்து நீங்கள் விலக என்ன காரணம்? 

 ``அவரின் சில செயல்பாடுகள் எனக்குப்பிடிக்கவில்லை. சில நேரம் அன்பாக நடந்துகொள்வார். ஆனால், பல நேரங்களில் அவரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியாகவும் அநாகரிகமாகவும் இருக்கும். அவரின் நண்பர்களிடம் விசாரித்தாலே உண்மை என்னவென்று தெரியும். நான் அவருக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும் என்று காந்தி லலித்குமார் கருதினார். என்னை யாரிடமும் பேசவிடமாட்டார். இதனால் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. என்னுடைய உயிரே என் குழந்தைகள்தான். அவர்களுக்கும் காந்தி லலித்குமாரால் பிரச்னை ஏற்பட்டது. நள்ளிரவில் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பார். அப்போது, போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100க்கு கால் செய்துள்ளேன். ஒரு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளேன். காந்தி லலித்குமாரை நேசித்தது உண்மைதான். ஆனால், அவரை திருமணம் செய்யவில்லை. எங்களுக்குள் நடந்தது மற்றவர்களுக்குத் தெரியாது. லலித்குமாரால் நான் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதனால்தான் அவரை விட்டு விலகினேன்"

 லலித் குமார்

மயிலாப்பூரில் என்ன நடந்தது? 

 ``என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் காந்தி லலித்குமார் தலையிட்டார். என்னுடைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றை அவர்தான் பயன்படுத்தினார். அதில், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்வார். என்னை மனைவி என்றே குறிப்பிட்டுள்ளார். நான் அனுப்பியது போல அவரே `ஐ லவ் யூ' என்று அனுப்பிக்கொள்வார். இவ்வாறு அவர் நடந்துகொண்டதால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மயிலாப்பூரில் நானிருக்கும் தகவலை தெரிந்துகொண்ட லலித் அங்கு வந்து என்னுடன் பிரச்னை செய்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தீக்குளிப்பதாக மிரட்டினார். இதனால்தான் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீஸாரும் எங்களை விசாரித்தனர். அப்போதுகூட நான் காந்தி லலித்குமாரை காதலித்தது உண்மை என்றுதான் எழுதிக் கொடுத்தேன். அதுபோல காந்தியிடமும் போலீஸார் எழுதி வாங்கிக் கொண்டு அவருக்கு அறிவரை கூறி அனுப்பினர். ஆனால், எமோஷனில் காந்தி லலித்குமார் தற்கொலை செய்துவிட்டார். அவரின் மரணத்துக்கு நான் காரணமல்ல. உண்மையில் நான்தான் அவருக்குமுன் தற்கொலை செய்திருக்க வேண்டும். அவரால் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். தற்போது, இந்த பிரச்னையால் வீட்டு உரிமையாளர் என்னை காலி செய்ய சொல்லிவிட்டார். இதனால் எங்கே செல்லப் போகிறேன் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஸ்கூலுக்குகூட போகவில்லை. எனக்கென்று உதவி செய்ய யாருமில்லை. ஆதரவில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்"

நீங்களும் காந்தி லலித்குமாரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மெட்டி அணிவிக்கும் வீடியோ வெளியானது எப்படி?

 ``அதுதான் தெரியவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், எனக்கு ஆதரவாகவும் அன்பாகவும் இருந்தார் காந்தி லலித்குமார். அப்படிதான் எங்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அப்போது ஒருநாள், அவரின் செல்போனை பார்த்தபோது பெண்களின் புகைப்படங்கள் இருந்தன. அவர்கள் குறித்து விசாரித்தபோதுதான் காந்தி லலித்குமாரின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது. இதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால், அவர் விடவில்லை. மூன்று ஆண்டுகளாக தொல்லைக் கொடுத்தார். குழந்தைகளுக்காக பொறுமையாக இருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், தற்போது பார்ப்பவர்கள் தவறாக கருதுகின்றனர். நான் எந்த தப்பும் பண்ணவில்லை. அதுதான் உண்மை. அந்தப் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை வெளியிட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி லலித்குமாரின் குடும்பத்தினருக்கு எல்லாம் தெரியும் என்பதால், அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். லலித், இறந்தபிறகும் அவரின் வாட்ஸ்அப் நம்பர் ஆன் லைனில் இருக்கிறது. அந்த போன் யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தால் போதும். புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டவர்களின் விவரம் தெரிந்துவிடும். மேலும், காந்தி லலித்குமாருடன் பழகிய பெண்கள் குறித்த தகவல்கள் எனக்குத் தெரியும். அவர்களின் பெயரை வெளியிட நான் விரும்பவில்லை"