வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (20/09/2018)

கடைசி தொடர்பு:11:44 (20/09/2018)

''அரசாங்கமும் போலீஸும் டார்ச்சர் பண்றாங்க!'' - கருணாஸ்

நடிகர் கருணாஸ்

``கடந்த ஆறு மாதங்களாக என்னையும் நிர்வாகிகளையும் டார்ச்சர் பண்ணியிருக்கிறார்கள்'' என்று நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைச் தொடர்ந்து நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கருணாஸ், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசியதைக் குறிப்பிட்டு இந்தப் புகாரை இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு கொடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ-விடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

நீங்கள் போலீஸ் அதிகாரி ஒருவரை விமர்சித்து பேசியதாகச் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?

 ``எங்கள் அமைப்பு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரி அரவிந்தனைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில உளவுத்துறை செயலாளர் உட்பட போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதனால்தான் அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகள் குறித்து எதுவும் பேசவில்லை."

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் விமர்சித்ததாகக் கூறப்படுகிறதே? 

``கடந்த ஆண்டு ஜயந்தி விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நான் நிர்வாகிகளுடன் காத்திருந்தேன். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. அதற்கான காரணம் அன்றைக்கு எனக்குத் தெரியவில்லை. அப்போது முதல்வரை வரவேற்று சால்வை அணிவித்துவிட்டு மரியாதை செலுத்திவிட்டு சென்றுவிட்டோம். அதுதொடர்பாக விசாரித்தபோது தினகரன் ஆதரவாளராக இருக்கும் கருணாஸால் பிரச்னை ஏற்படும் என்று உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாகத் தெரியவந்தது. வரவேற்க நிற்கும் ஒருவன் மீது ஏன் தவறான தகவலை உளவுத்துறை சொல்ல வேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது. தவறு செய்கிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். தவறு செய்யாதவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்கிறார்கள். படித்த ஐ.பி.எஸ் அதிகாரி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்யலாமா, என்னுடைய நிர்வாகிகளைக் கை கால்களை உடைப்பேன் என்று ஒரு போலீஸ் அதிகாரி சொல்லலாமா. பிறகு ஏன் கோர்ட் இருக்கிறது. காக்கிச்சட்டை போட்டு இருக்கிறோம். அதிகாரம் நம் கையில் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆணவமாகச் செயல்படலாமா. இதுபோன்ற நியாயமான கேள்விகளைத்தான் ஆர்ப்பாட்டத்தில் கேட்டேன். ஆனால், சமூகவலைதளங்களில் ஒவ்வொரு விதமாக எடிட் செய்து வெளியிடுகிறார்கள். என் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு இதுதான் பதில். 30  வருடங்களாக அமைப்பு நடத்தும் என் மீது 75வது பிரிவின் கீழ்கூட காவல்துறையில் வழக்கு கிடையாது. எந்தச் சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் யாரையும் தவறாகப் பேசியதில்லை. இப்படி ஒருமையில் பேசியதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியும் இந்த அரசும்தான் காரணம்."  

எதற்காக உங்கள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது? 
 
``தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் பேசிய பிறகுதான் கடந்த 6 மாதங்களாக டார்ச்சர் பண்ணிவருகிறார்கள். அதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்திடம் 13 புகார்களைக் கொடுத்துள்ளேன். சட்டசபையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகப் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உடனே எனக்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கிவிட்டார்கள். இதனால் என்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நான் பேசியதன்மூலம் அதிகாரிகள் மனம் வருத்தமடைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்."