வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (20/09/2018)

கடைசி தொடர்பு:19:06 (20/09/2018)

``நயன்தாரா சொன்னதும் மலைச்சுப் போயிட்டேன்!'' - ஃப்ரெண்ட்டா நடிக்கும் திருநங்கை ஜீவா

 

ஜீவா சுப்பிரமணியம்

'தர்மதுரை' படம் இந்த சமூகத்துல எனக்கான ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. அதுக்குப் பிறகு எத்தனையோ இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைஞ்சிருக்கேன். அப்போ ஒருத்தர் 'நீ என்ன நயன்தாராவா. பெரிய ஸ்டாருன்னு மனசுல நினைப்பா'ன்னு கேட்டுக் கிண்டல் பண்ணினாரு. அப்போ முடிவு பண்ணினேன் நாம நயன்தாரா மேடம்கூட ஒரு படத்துலயாவது சேர்ந்து நடிச்சிடணும்னு. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு அந்தக் கனவு நிறைவேறியிருக்கு” என்றார் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம் பூரிப்புடன். 

``சீக்கிரம் நீ நயன்தாரா மேடம்கூட நடிச்சிடணும்னு அடிக்கடி எனக்குள்ள சொல்லிட்டே இருப்பேன். நயன்தாரா மேடம் கமிட் ஆகியிருக்கிற அத்தனை கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கினேன். ஆனா, திருநங்கைங்கிற என் பிம்பம் சிலருக்கு இடையூறா இருந்துச்சு. சமீபத்துல நான் நடிச்சிருந்த 'அவள் நங்கை' குறும்படம் பார்த்துட்டுதான் டைரக்டர் சர்ஜூன், கோ டைரக்டர் நரேஷ் என்னை இந்தப் படத்துல கமிட் பண்ணியிருக்காங்க. நயன்தாரா மேடம் நடிக்கிற படத்துல நீங்க அவங்களோட ஃப்ரெண்டா நடிக்கணும்னு அவங்க சொன்னதுமே நான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ என்னைக் கிண்டல் பண்ணின அந்த இயக்குநர்தான் என் கண்ணு முன்னால வந்து போனாரு. 

திருநங்கை

முதல்ல ஷூட்டிங் ஸ்பாட்ல நயன்தாரா மேடத்தைப் பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பா தெரிஞ்சாங்க. ஆனா, அவங்க 'ஹாய் ஜீவா எப்படி இருக்கீங்க, சாப்பிட்டாச்சா'ன்னு இயல்பா பேச ஆரம்பிச்சப்போ இன்னும் பிரமிப்பா தெரிய ஆரம்பிச்சாங்க. அதே மாதிரி ஒரு சீன்ல அவங்ககூட நான் நடிக்கணும். நடிச்சு முடிச்சதும் நான் அவங்க பக்கத்துலேயே நின்னுட்டு இருந்தேன். 'நீ ஏன்மா நிக்கிறீங்க... போய் உக்காருங்க'னு சொன்னாங்க. 'இல்ல மேடம் உங்களோட பிராப்பர்டி என்கிட்ட கொடுத்திருக்காங்க'னு சொன்னேன்.


உடனே பிராப்பர்டி கொடுத்தவரைக் கூப்பிட்டு 'என்னோடதை என் கையிலதான கொடுக்கணும், ஏன் அவங்ககிட்ட கொடுத்தீங்க.. வீணா அவங்க நின்னுட்டு இருக்காங்க'னு அவங்க சொன்னதும் மலைச்சுப் போயிட்டேன். இப்போதைக்கு படத்துல மட்டும் நான் மேடத்தோட ஃப்ரெண்டு. சீக்கிரம் அவங்க மனசுலேயும் இடம் பிடிக்கணும். மேடம் மட்டுமில்ல, செட்ல யாருமே என்னை ஒரு திருநங்கையா பார்க்கவே இல்ல. அவங்களோட ஒருத்தியாதான் நினைச்சாங்க. இந்த டீம்ல இருக்கிற நிறைய பேர் இளம் தலைமுறையினர்தான். இப்ப உள்ள பசங்கள்லாம் ரொம்பவே ஜென்யூனா நடந்துக்கிறாங்க” என்றவரிடம், சரி படத்தோட பேர் என்னன்னு சொல்லுங்களேன் என்றதும், ``மன்னிச்சிடுப்பா. அது மட்டும் சீக்ரெட். கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என்று நழுவிக்கொண்டார்.