வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (20/09/2018)

கடைசி தொடர்பு:12:54 (20/09/2018)

``ஷூட்டிங்ன்னு வீட்டுக்குள்ள வந்தா; இப்போ வெளியில் போகமாட்டேங்றா!"‍- மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்

 நடிகர் விஜயகுமார்

மகளும் நடிகையுமான வனிதா மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை நடிகர் விஜயகுமார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவுக்கு சொந்தமான வீடு மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர், 19வது தெருவில் உள்ளது. அதை நடிகர் விஜயகுமார், தன்னுடைய இரண்டாவது மகள் ப்ரித்திக்கும் மூன்றாவது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கும் லீசுக்கு கொடுத்துள்ளார். ஆனால், மூத்த மகள் நடிகை வனிதாவுக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் அந்த வீட்டில் ஷூட்டிங் நடத்தப்போவதாகக் கூறி நடிகை வனிதா அங்கு வந்துள்ளார். ஆனால், பிறகு, வீட்டைவிட்டு வெளியில் செல்ல அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 

 நடிகை வனிதா விஜயகுமார்

இந்த நிலையில், நடிகர் விஜயகுமார், மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவர், நடிகை வனிதா மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``என்னுடைய மனைவி மஞ்சுளாவுக்குச் சொந்தமான வீடு, மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ளது. அந்த வீட்டை லீசுக்கு கொடுத்துள்ளேன். வீட்டுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்து வெளியில் செல்ல மறுக்கிறார். எனவே, அந்த வீட்டை அவரிடமிருந்து மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் மனு ஏற்பு சான்றிதழை போலீஸார் கொடுத்துள்ளனர். மகள் மீதே நடிகர் விஜயகுமார் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து நடிகை வனிதாவிடம் விளக்கம் கேட்க அவரை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.