வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (20/09/2018)

கடைசி தொடர்பு:17:47 (20/09/2018)

இறுதி மூச்சுவரையிலும் தமிழ்..! - காலமானார் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன்

தமிழறிஞர் கி.த.பச்சையப்பன்

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 83. 

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசித்துவந்தார். இன்று காலையில் ஒரு வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தவருக்கு, 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றிய கி.த.பச்சையப்பன், தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக நீண்ட காலம் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராக மட்டுமின்றி, தனித்தமிழைப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்களில் பச்சையப்பனின் குரல் ஒலித்தபடி இருந்தது. 

பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்கபடியாக, ‘தமிழ் ஓசை’ நாளேட்டில் மொழி நடை ஆசிரியராகப் பணியாற்றி, அன்றாடச் செய்தியில் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில், புலவர் கி.த.பச்சையப்பனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் தாக்கத்தில் இன்றைய 24 மணி நேரத் தொலைக்காட்சிகளில் தனித்தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன. 

இயல்பாகத் தனித் தமிழில் உரையாடும் புல்வர் பச்சையப்பன், தன்னுடன் ஒரு முறை சந்தித்துப் பேசுகிறவர்களையும் தனித்தமிழில் உரையாடும் பழக்கத்தை உருவாக்கிவிடுவது அவரின் தனிச்சிறப்பு. 

அரசுப் பணியில் இருந்தபோதும், தமிழ் மொழி, இனப் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டார். 1999-ல் தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார். 

பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாக தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய பா.ஜ.க. அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது. 

புதுச்சேரி, குயவர்பாளையத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பை முடிக்கும் காலத்தில், பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியின் விடுதலைக்கான இயக்கத்தில் சேர்ந்தார். இதனால் அவரின் பள்ளி இறுதி வகுப்பு தடைபட்டது. தமிழகத்தின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பில் சேர்ந்தார். பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்ட ஈடுபாடு காரணமாக இங்கும் படிப்பு தடைபட்டது. 1954 ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய தேசியக் கொடியை ஏற்றியதால், பிரெஞ்சு போலீஸால் தாக்கப்பட்டார், பச்சையப்பன். அதையொட்டி தமிழகப் பகுதியில் ஆறு மாதங்களுக்கும் மேல் தலைமறைவாக இருந்தார். 

பின்னர், திண்டிவனத்தை அடுத்த மயிலத்தில் தமிழ் வித்துவான் படிப்பை முடித்தவர், சென்னையில் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியராக ஓய்வுபெற்றார். 

மறைந்த கி.த.பச்சையப்பனின் உடல் அஞ்சலிக்காக,  புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  உடல் அடக்கமானது, நாளை (21/09/18) பிற்பகலில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.