வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (20/09/2018)

கடைசி தொடர்பு:13:53 (20/09/2018)

`ஜி.கே.வாசன்; சீமான்; வேல்முருகன்!’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்பட முடியாத சூழலுக்கு, ஈழத்தமிழர் விவகாரமும் ஒரு காரணமாக அமைந்தது. மீண்டும் அதே பிரச்னையை மையமாக எடுக்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

`ஜி.கே.வாசன்; சீமான்; வேல்முருகன்!’ - தி.மு.க - காங்கிரஸ் அணியை உடைக்கும் எடப்பாடி பழனிசாமி

ழத் தமிழர் படுகொலைக்கு காரணமான தி.மு.க, காங்கிரஸைக் கண்டித்து, பொதுக்கூட்டத்துக்கான தேதியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கையிலும் முதல்வர் இறங்கியிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பொதுக்கூட்டம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சென்னை, ராயப்பேட்டையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி, 'மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடந்தபோது, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்த ரகசியத்தை இலங்கை அரசின் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே ஒப்புதல் வாக்குமூலமாகப் பகிரங்கப் படுத்தியுள்ளார். 2010-ம் ஆண்டு ஜூலையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘ஈழப் போரில் அப்பாவி மக்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியினரைப் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து விசாரிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து அனைத்து ரகசியங்களையும் ராஜபக்ஷே வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலைக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதற்கும் உடந்தையாகச் செயல்பட்ட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சர்வதேச போர்க்குற்றங்களாகக் கருதி சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்ற வாளிகளாகத் தண்டிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த இவர்கள் அரசியலைவிட்டே விலக வேண்டும். மேலும், போர் நடைபெற்றபோது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் அத்தனை குற்றங்களுக்கும் உடந்தையாக இருந்தார்' என்றார். இதையடுத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 'இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான தி.மு.க, காங்கிரஸைக் கண்டித்து வரும் 25-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்"  என்றார்.

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

' இப்படியொரு கண்டன பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 

"தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டுவைக்கும் வகையில்தான் கண்டன பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. `இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியைப் பிரித்துவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வைவிடவும் பெரிய சக்தியாக நாம் நிற்கலாம்' எனவும் அவர் கணக்குப்போடுகிறார். 'நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் களம் என்பது அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையில் மட்டும்தான் இருக்கும். தனி மனிதர்களான தினகரன், அழகிரி போன்றவர்களால் சிறிய அளவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்த முடியும். தற்போது யாருடனும் கூட்டணியில்லாமல் இருக்கிறோம். ஆனால், தி.மு.க-வுக்குக் காங்கிரஸ், ம.தி.மு.க உட்பட சிறிய கட்சிகளின் ஆதரவு அளிக்கின்றன. இந்தக் கூட்டணியை உடைப்பது மிக எளிதானது' என்ற மனநிலையில் இருக்கிறார் முதல்வர். அதன் ஒருபகுதியாகத்தான் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்" என்றவர், 

"முள்ளிவாய்க்காலில் 2009-ம் ஆண்டு நடந்த இன அழிப்பு படுகொலைகளை முன்னிறுத்தி, நான்கு பொதுக்கூட்டங்களை அ.தி.மு.க நடத்த இருக்கிறது. மோடிக்கு ஆதரவாக நாங்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்கினார். இப்போது சூழல்கள் மாறிவிட்டன. ஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்த அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்பட முடியாத சூழலுக்கு, ஈழத்தமிழர் விவகாரமும் ஒரு காரணமாக அமைந்தது. மீண்டும் அதே பிரச்னையை மையமாக எடுக்கும்போது, `இந்தக் கூட்டணி உடையும்' என நம்புகிறார். 2014 தேர்தலில் சோனியாவுக்கு எதிராகக் களத்தில் நின்றார் கருணாநிதி. 'அப்போது நடந்த விஷயங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஜி.கே.வாசன், சீமான், வேல்முருகன் உட்பட தமிழ் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தன்னை ஆதரிப்பார்கள்' என முதல்வர் நினைக்கிறார். 

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்த வட்டத்துக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவர் சேர்க்கவில்லை. ஸ்டாலினைப் பொறுத்தவரையில், '5 இடங்களுக்குக்கூட காங்கிரஸ் தகுதியில்லை' என்றுதான் நினைக்கிறார். எனவேதான், தமிழ் உணர்வுள்ள ம.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளும் தி.மு.க-வுக்கு அவசியமானதாக இருக்கிறது. அதேவேளையில், தேர்தல் கூட்டணி என வரும்போது காங்கிரஸ் கட்சியை அவர் பிரதானமாகப் பார்க்கவில்லை. இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைப்பது எளிது என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் நெருக்கத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இன்னும் உக்கிரமாகச் செயல்படவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்" என்றார் விரிவாக.