வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (20/09/2018)

கடைசி தொடர்பு:19:07 (20/09/2018)

'சுயநினைவோடுதான் பேசினீர்களா?'  - கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா 

காவல்துறைக்கு சவால்விடும் வகையில் பேசிய நடிகர் கருணாஸ் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. 'சமுதாயரீதியாக கருணாஸ் பேசியதை ராக்கெட் ராஜா ஏற்கவில்லை. அவரை போனில் அழைத்து கடுமையாக எச்சரித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

கருணாஸ்

சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ், 'சாமி, சிங்கம் படத்தை எல்லாம் பார்த்துட்டு, அதேபோல் இரண்டு, மூன்று போலீஸ் அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு மேல் அதிகாரிகள் அட்வைஸ் செய்ய வேண்டும். எனக்கும் வரலாறு தெரியும். நான் சட்டமன்றத்திலேயே பேசினவன். உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினாத்தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால், நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம்' என்றவர், குறிப்பிட்ட ஒரு சமுதாயம் குறித்தும் சில விஷயங்களைப் பேசினார். அவரது இந்தப் பேச்சு காவல்துறை வட்டாரத்தை மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத் தலைவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கருணாஸ் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராக்கெட் ராஜா

இந்நிலையில், நடிகர் கருணாஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்திருக்கிறார் நாடார் மக்கள் சக்தி இயக்கத்தை நடத்தி வரும் ராக்கெட் ராஜா. நேற்று இரவு கருணாஸைத் தொடர்பு கொண்டவர், 'நீங்கள் பேசியதைக் கேட்டோம். ஏன் இந்த மாதிரியெல்லாம் பேசினீர்கள். தென்மண்டலத்தில் உள்ள அனைவரிடமும் நாங்கள் நல்லமுறையில் பழகி வருகிறோம். நீங்கள் பேசிய பேச்சை, மீண்டும் ஒருமுறை போட்டுக் கேட்டுப் பாருங்கள். யாருமே சும்மா இருக்க மாட்டார்கள். சுயநினைவோடுதான் பேசினீர்களா? இந்தப் பிரச்னை எந்தளவுக்குப் போகப் போகிறது என உங்களுக்குத் தெரியுமா?' எனச் சத்தம் போட, 'அப்படியெல்லாம் இல்லை தலைவரே...தெரியாமல் வார்த்தை வந்துவிட்டது' எனப் பதற்றத்துடன் பதில் அளித்திருக்கிறார் கருணாஸ். தொடர்ந்து பேசிய ராக்கெட் ராஜா, 'எனக்கும் வார்த்தை வந்துவிட்டது. ஸாரி பிரதர் எனக் கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?' எனக் கேட்க, ' தப்புதான் பிரதர். இனிமேல் இதுபோல் நடக்காது. பத்திரிகையாளர்களிடமும் பேசியிருக்கிறேன். பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்' எனக் கூறியிருக்கிறார்.