இடம் மாறுதலில் லஞ்சம்! 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூசுதட்டும் விஜிலென்ஸ் | Income tax department starts enquiry in 15 years old case

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (21/09/2018)

கடைசி தொடர்பு:16:32 (21/09/2018)

இடம் மாறுதலில் லஞ்சம்! 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூசுதட்டும் விஜிலென்ஸ்

வருமான வரித்துறை

பழைய வழக்கு ஒன்றைத் தூசு தட்டி எழுப்பி வருகிறார்களாம் வருமான வரித் துறையின் தென் மண்டல விஜிலென்ஸ் அதிகாரிகள். இதன் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. அங்கே, கடந்த சில நாள்களாக  வருமான வரித் துறையின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், தற்போது உயர் பொறுப்பில் உள்ள சிலர், நேரில் வந்து விசாரணையைச் சந்திக்கிறார்கள். 2003-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் நிதித்துறையின் இணை அமைச்சராகப் பதவியில் இருந்தார். அகில இந்திய அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மாறுதல் விவகாரங்களில் லஞ்சப் பணம் கைமாறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி, உதவியாளரைக் கைதுசெய்தனர். இதனால், செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலகினார். இந்த ரெய்டின் தொடர்ச்சியாக, ஆடிட்டர் ஒருவர் வீடு உள்ளிட்ட சில இடங்களில் ரெய்டு நடந்தது. அப்போது கிடைத்த டைரி ஒன்றில், வருமான வரித் துறையில் அந்த காலகட்டத்தில் பணிபுரிந்த 200 அதிகாரிகளின் பெயர்கள் சிக்கின. அதையடுத்து, அந்த அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுத்தனர். ரெய்டில் சிக்கிய அதிகாரிகள் தரப்பில், தங்கள் தரப்பு நியாயத்தை வலியுறுத்தி,  உச்ச நீதிமன்றத்துக்குப் போனார்கள். பல்வேறு விசாரணைகளுக்குப்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது  துறைரீதியான விசாரணை நடத்தும்படி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டதாம். அதையடுத்து, அந்தப் புகாரில் இடம்பெற்றவர்களில் யார் யார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து, அவர்களுக்கு சம்மன் அனுப்பி மறு விசாரணையை வருமானவரித் துறையின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அதுதொடர்பாகத்தான், முன்னாள் அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வந்து போகிறார்களாம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க