`ஒரு கிலோ கேக் வாங்குங்க; ஒரு லிட்டர் பெட்ரோலுடன் செல்லுங்க!’ - வேலூர் பேக்கரி ஓனர் தாராளம் | Vellore bakery announced new offer

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (21/09/2018)

கடைசி தொடர்பு:18:15 (21/09/2018)

`ஒரு கிலோ கேக் வாங்குங்க; ஒரு லிட்டர் பெட்ரோலுடன் செல்லுங்க!’ - வேலூர் பேக்கரி ஓனர் தாராளம்

`ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்' என அறிவித்து எல்லோரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது வேலூர் அண்ணாசாலையில் உள்ள DC பேக்கரி. இந்த விளம்பரத்தைப் பார்த்து பலபேர் பேக்கரியை ஆச்சர்யமாகப் பார்த்துச் செல்கிறனர். பல பேர் கேக் வாங்கி பெட்ரோல் கூப்பனையும் பெற்றுச் சென்றுள்ளனர்.


விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நாமும் பேக்கரி உரிமையாளர்கள் சீனிவாசன் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் அறிமுகம் செய்துகொண்டு பேசினோம். "மக்களுக்கு இப்போ எது பெரிதாகவும் தேவையாகவும் இருக்கிறதோ அதை இலவசமாகக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதன் ஒரு நோக்கம்தான் இந்தப் பெட்ரோல் இலவசம். நாங்கள் இருவரும் சேர்ந்து பேக்கரியைத் தொடங்கி 2 வருடங்கள் ஆகின்றன. வேலூர் நகரில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் எங்களது பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். ஒரு வெஜ் பப்ஸ் வெறும் 8 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.

அதேபோல் பர்கர் 34 ரூபாய்க்கு தருகிறோம். இது ஓரளவு மக்களுக்குத் தெரிந்து ரெகுலராக வருகின்றனர். ஆனால், கடை வைத்து இரண்டு வருடங்கள் ஆகியும் பலபேருக்கு கடை இங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. பல முறை பல ஆஃபர்கள் போட்டோம். ஆனால், அது எதுவும் ரீச் ஆனதா என்றால் அது குறைவுதான். விலை குறைவாகவும் மிகவும் சுவையாகவும் எங்களது பண்டங்களைத் தருகிறோம். கஸ்டமர் வருகை கொஞ்சமாக இருந்தது. சில மாதங்களில் அதை வெகுவாக உயர்த்தியுள்ளோம். ஆனால், மேலும் கஸ்டமர் வருகையை அதிகப்படுத்தவே இந்த மாதிரியான புது முயற்சி எடுத்தோம். இந்த ஆபர் இன்று காலை தொடங்கினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குள் 10 கேக் ஆர்டர் செய்து வாங்கிச்சென்றுள்ளனர். இது கேக்கு மட்டும் ஆஃபர் இல்லை. எங்கள் கடையில் 495 ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம். இதற்காக 5 பெட்ரோல் பங்கில் பணம் கட்டியுள்ளோம். இதனால் எங்களுக்கு நஷ்டம் எதுவும் இல்லை. ஆனாலும் பரவாயில்லை. கஸ்டமர் எங்கள் கடையைத்தேடி வர வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள்'' என்றனர் புன்னகையுடன். இந்த ஆஃபர் வேலூர் நகர மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க