வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (22/09/2018)

கடைசி தொடர்பு:16:41 (22/09/2018)

`உன்னால என்ன பண்ண முடியும்?' - சென்னையில் நடுரோட்டில் பெண்ணுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!

சென்னை ஆளுநர் மாளிகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைக் கைபிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவர் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

வாலிபர்

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே ஆர்ஒன் 5 எனப்படும் அதிவேக இருசக்கர வாகனத்தைப் பெண் ஒருவர் ஓட்டிச்சென்றுள்ளார். அந்த வண்டியைப் பார்த்து, அவரை ஆக்டிவாவில் ஒரு இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். மதுபோதையில் பின் தொடர்ந்த அவர், அந்த பெண்ணின் வண்டியை மறித்து சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், இளைஞரை தாக்கியுள்ளார். இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. `நீ ஒரு பெண். உன்னால என்ன பண்ண முடியும்?' `நா நெனச்சா நீ அவ்வளவு தான்' என்று சரமாரியாக திட்டி அந்தப் பெண்ணை பதிலுக்குத் தாக்கியுள்ளார் போதையிலிருந்த அந்த இளைஞர். அப்போது, அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர்.

 

இச்சம்பவத்தின்போது, அச்சாலை வழியாக சென்ற ஒருவர், அருகிலிருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல் ஆய்வாளர் ஒருவர் அங்கு வந்துள்ளார். அந்த காவல் ஆய்வாளரிடமும் எக்குத்தப்பாக அந்த இளைஞர் பேசினார். பின்னர் அந்த
இளைஞரை எச்சரித்து  அனுப்பி வைத்தார் அந்தக் காவலர். ஆளுநர் மாளிகை அருகே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.