'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்! | deputy chief minister o panneerselvam slams stalin

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (22/09/2018)

கடைசி தொடர்பு:19:00 (22/09/2018)

'நடந்து பார்த்தார்; டீ குடித்து பார்த்தார்; ஒண்ணும் நடக்கல'- மு.க.ஸ்டாலினைக் கிண்டலடித்த ஓபிஎஸ்!

`நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேர் திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் வாருங்கள்' என துணை முதல்வர் பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்துப் பேசியுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பன்னீர் செல்வம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர் பன்னீர் செல்வம்

விழாவில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், "இந்தியாவிற்கு எல்லை இருக்கிறது, எம்.ஜி.ஆருக்கு எல்லை இல்லை. நூற்றாண்டு விழா கூட்டம் பல்வேறு காரணங்களால் சற்று தாமதமாக குமரி மாவட்டத்தில் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நடக்கும் இந்த விழாவைக் காண அம்மா இல்லை, ஆனால் அம்மா ஆட்சி இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவும் நமக்குத்தான் இருக்கிறது என இந்த விழாக்கள் காட்டுகின்றன. சைவ சாப்பாடா, அசைவ சாப்பாடா என யாரவது கேட்டால் எம்.ஜி.ஆர். போட்ட சத்துணவு சாப்பாடு எனத் தமிழகத்தில் பலர் சொல்லுகிறார்கள். தான் பாடிய பாடல்களுக்குத் தானே இலக்கணம் ஆனவர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆண்டபோது தமிழகத்தில் பசி இல்லை. 

பிறக்கும்போதே கருணை உள்ளத்தோடு பிறந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் இருந்தபோதும் கொடுத்தார். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அம்மாவை நமக்குக் கொடுத்தார்கள். ஏழைகள் நலம்பெற நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் வழியில் இந்தியாவில் சிறந்த ஆட்சியை அம்மா கொடுத்தார்கள். அதே ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செய்கிறது. நம்மை வீரம் இல்லை என சொன்னவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள். முதல்வர் கனவில் மிதந்தவர்கள் கண்ணீர் கடலில் நிற்கிறார்கள். அந்த விரக்தியில் வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேர் திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் வாருங்கள். 

அம்மாவிற்குத் துரோகம் செய்த, அம்மாவால் நீக்கப்பட்ட ஒருவர் தொண்டர்கள் அவர் பக்கம் இருப்பதாகச் சொல்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுடன் எஃகு கோட்டையாக அ.தி.மு.க இருக்கிறது. நம் இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. செயல் தலைவராக இருந்து புதிதாக தலைவராக வந்தவர், `ஆட்சியைக் கலைக்காமல் தூங்கமாட்டேன்’ என்றார். அப்படியானால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டியதுதான்.  2016-ம் ஆண்டிலும் கலர் கலராக டிரஸ் போட்டார், நடந்து பார்த்தார், சைக்கிளில் சென்றார். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் டீ குடித்தார், நாம டீ கடையே நடத்தியிருக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனால், அவர்கள் ஆர்.கே.நகரில் டெபாசிட் போனதை மறந்துவிட்டார்கள். தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தை நடத்த வேண்டும்" என்றார்.