வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (22/09/2018)

கடைசி தொடர்பு:12:41 (23/09/2018)

கூட்டுறவு சங்கத் தேர்தலில் உட்கட்சி பூசல்... டெபாசிட் இழந்த ஓ.பி.எஸ். தரப்பு!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் உட்கட்சி பூசல்... டெபாசிட் இழந்த ஓ.பி.எஸ். தரப்பு!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வசம் இருக்கிறது வீட்டுவசதி வாரியத்துறை. இந்தத்  துறையின் மாநில அளவிலான பணியாளர்கள் கூட்டுறவு சங்கத் தேர்தல் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியில் களமிறங்கியது. ஆளும் கட்சியான அ.தி.மு.க அசால்ட்டாக இந்த சங்கத் தேர்தலில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவு அ.தி.மு.கவுக்கு இடியாக அமைந்திருக்கிறது. தி.மு.கவே பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளது. "தனது துறையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட வெற்றி பெற ஓ.பி.எஸ் நினைக்கவில்லை, இவரைப் போன்றே தொழிற்சங்க பேரவையின் கன்வீனராக இருக்கும் ஜக்கையனும் நினைக்கவில்லை. மாநில அளவிலான இந்த ஒரு கூட்டுறவு சங்கத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் தி.மு.கவுக்கு தாரை வார்த்திருக்கிறார் ஓபிஎஸ்" என்று அ.தி.மு.க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

'அண்ணா பொதுத் தொழிலாளர் சங்க'த்தின் சார்பில் ஏழு பேர் மற்றும் கூட்டுறவு பணியாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் போகும் அளவுக்குப் படுதோல்வி அடைந்தனர். 'இதற்குக் காரணம் ஓ.பி.எஸ் அணி, சின்னச்சாமி அணி என இரண்டாகச் சிதறியது தான்' என்கிறார்கள் அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இந்தத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக உக்கிரபாண்டி நியமிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் (ஓ.பி.எஸ், எடப்பாடி) ஆகியோர் சின்னச்சாமியை பேரவை பொறுப்பில் இருந்து நீக்கப்போவதாகத் தகவல் வெளியானதை அடுத்து, ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைத் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கினார் சின்னச்சாமி. இந்த நிலையில், அண்ணா பொதுத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஒருபக்கமும், சின்னச்சாமியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இன்னொரு பக்கமுமாக அதே பொறுப்புகளில் ஒரே உறைக்குள் இரண்டு கத்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே தொழிற்சங்கத் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. 

அண்ணா தொழிற்சங்க மாநில தலைவரும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவருமான உக்கிரபாண்டியிடம் பேசினோம்.. 

உக்கிரபாண்டி, கூட்டுறவு சங்கத் தேர்தல்“ 'அம்மாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் யாரும் நீக்கப்படாமல் அந்தந்த பொறுப்பில் உள்ளவர்கள் பணியில் தொடர்வார்கள்' என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தார்கள். ஆனால், சின்னச்சாமி பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்துகொண்டு பல்வேறு ஊழல்களையும், கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தது கட்சியின் மேலிடத்திற்குத் தெரிந்த காரணத்தினால், அவரைப் பேரவை பொறுப்பில் இருந்து நீக்கப்போகும் நேரத்தில் அவராகவே தன்னிச்சையாக கட்சி மேலிட ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதியில்லாமல் புதிய தொழிற்சங்க நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார். அந்தப் பட்டியல் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கூட வெளியாகவில்லை. நான், இதே சங்கத்திற்கு அம்மா உயிரோடு இருக்கும்போது பொறுப்பாளராக இருந்து அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்திருக்கிறேன். எங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சக்திவேல், கன்வீனர் ஜக்கையன் போன்றவர்கள் தி.மு.கவுக்கு மறைமுகமாக ஆதரவளித்தனர். இதையெல்லாம் தொழிற்சங்க பேரவையில் வைத்து கேள்வி கேட்டதற்கு அவர்களிடம் இருந்து வந்த பதில் சர்வாதிகாரமாக இருந்தது. இவர்களின் போக்கு சரியில்லாததால்தான் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நாங்கள் யாரும் பணியாளர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.
 
காரணம் எங்கள் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல், சின்னச்சாமி யாரைச் சொன்னாரோ அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார். அதன் விளைவு இன்றைக்கு டெபாசிட் காலியாகி ஓ.பி.எஸ்க்கு அவமானத்தைத் தேடிக்கொடுத்திருக்கிறார்கள். மற்ற இடங்களில் நடக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தல் தோல்வி என்பது வேறு. இது மாநில அளவிலான சங்கத்தேர்தல். இதில் வெற்றிபெற முடியாதது அ.தி.மு.கவுக்கு இழுக்காக அமைந்துள்ளது." என்கிறார். 

ஜக்கையன்
அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனரும் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜக்கையனிடம் இத் தேர்தல்தோல்வி குறித்து பேசினோம்.

"தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடக்கிறது.அதையெல்லாம் என்னால் ஞாபகம் வைத்திருக்கமுடியாது.வீட்டு வசதி வாரிய பணியாளர்கள் கூட்டுறவுச் சங்க தேர்தலில் எங்க வேட்பாளர்கள் டெப்பாசிட் காலியகும்அளவிற்குத் தோல்வி அடைய வாய்ப்பு இல்லை.நான் அலுவகம் சென்று ஃபைல் பார்த்த பிறகு தான் பேச முடியும்என்கிறார் எதுவுமேதெரியாதவர் போல்.

ஆளும் கட்சியாக இல்லை கமிசன் கலெக்சன் கட்சியாக அதிமுக அரசு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதுஉண்மைதான் போல என்று கட்சி நிர்வாகிகள் சந்தேகம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்