`ஸ்டெர்லைட் அறிக்கை 6 வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்!’ - ஆய்வுக் குழுத் தலைவர் தகவல் | Detailed report on sterlite plant will be submitted within 6 weeks, told inspection team

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (22/09/2018)

கடைசி தொடர்பு:22:30 (22/09/2018)

`ஸ்டெர்லைட் அறிக்கை 6 வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்!’ - ஆய்வுக் குழுத் தலைவர் தகவல்

”ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு மற்றும் மக்களிடம் நடத்தும் கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பான ஆய்வறிக்கை 6 வாரத்திற்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்” என ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார். 

கொம்பனாற்று ஓடையில் ஆய்வு

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்திட  பசுமைத் தீர்ப்பாயம், மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி  தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்தக் குழுவினர் இன்று மாலை 4.30 மணிக்கு விமானம் மூலம்  துாத்துக்குடிக்கு  வந்தனர். பின்னர், புதுக்கோட்டை அருகில்  உள்ள கொம்பாற்று ஓடை அருகில் உள்ள தனியார் நிலத்தில் தாமிரக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த 30 ஏக்கர் நிலத்தில் மொத்தம், 3.25 லட்சம் டன் தாமிர கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதேபோல் இன்னும், 11 இடங்களில்  தாமிரக் ழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. கொம்பாற்று ஓடையில் 3 இடங்களில் இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.  

தருண் அகர்வாலின் இந்த ஆய்வின் போது,  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி மாவட்ட   எஸ்.பி., முரளி ரம்பா ஆகியோர் இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் துணைத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர் தருண் அகர்வால்,”ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகள் கொட்டுப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்துள்ளோம். நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்குள்  ஆய்வு செய்ய இருக்கிறோம்.

ஆய்வுக் குழு

தொடர்ந்து, 11.30 மணிக்கு அரசினர் பால்டெக்னிக் கல்லூரியில் வைத்து கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும். இதில், ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துக்கள், குறைகளைப் பொதுமக்கள் கூறலாம். இத்துடன் சங்கங்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என எந்த தரப்பினரும் மனு அளிக்கலாம், கருத்துக்களை கூறலாம். இந்த ஆய்வின் முழுவிபர அறிக்கை  6 வாரத்திற்குள் பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.   

ஆய்வுக்குழுவின் வருகை யை முன்னிட்டு  புதுக்கோட்டை, கொம்பாற்று ஓடை  பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். வன்முறைகள் நடைபெறாமல் இருக்க இரண்டு வஜ்ரா வாகனங்கள்,  தீயணைப்பு வண்டி, மொபைல் வேன்கள் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தன. ஆய்வுக் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க வந்த வைகோ, ” ஸ்டெர்லைட் ஆலையின் பயங்கரமான கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடம் நஞ்சாக மாறிவிட்டது. இதனைத் தோண்டி வேறு இடத்தில் கொட்டினாலும், அந்த நிலமும் நஞ்சாகிவிடும். இந்த  ஆலை தொடர்ந்து இயங்கினால் தூத்துக்குடி நாசக்காடாகி விடும். எனவே,  ஆலையை மூடிட வலியுறுத்தி ஆய்வுக்குழு தலைவரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளேன். இந்த ஆலையை மூடிவிடுவதே நல்லது” என்றார்.  ஆய்வு குழுவினரை படம் எடுக்கவும் செய்தி சேகரிக்கவும் சென்ற நிருபர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் பயங்கர கெடுபிடி செய்தனர்.           

நீங்க எப்படி பீல் பண்றீங்க