ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பணிகளை துவக்கியது பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு! | Inspection at tuticorin Sterlite begins today

வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (23/09/2018)

கடைசி தொடர்பு:11:15 (23/09/2018)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு பணிகளை துவக்கியது பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளை துவக்கினர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் தொடர் போராட்டத்தினால், கடந்த மே 28-ம் தேதி ஆலைக்கு சீல் வைக்கும் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை மீண்டும் திறக்க கோரியும் ஆலைத்தரப்பினர், பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் பசுமைத்தீர்பாயம் அனுமதி அளித்தது. 

இந்நிலையில், ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வசீப்தரை நியமனம் செய்தது தீர்ப்பாயம். ஆனால்,அவர்  இக்குழுவில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காததால், மேகாலயா மாநிலத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அலுவலர் டாக்டர் சதீஸ் கார்கோர்டி,  சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த சீனியர் சயிண்டிஸ்ட் வரலட்சுமி   ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழுவை நியமித்தது.

இக்குழுவினர் நேற்று மாலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தனர். புதுக்கோட்டை கொம்பாற்று ஓடை அருகில் தாமிரக் கழிவு மண் கொட்டப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்தனர். இன்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வுப் பணியினைத் துவக்கினர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, தூத்துக்குடியில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மக்களிடம் ஆலை குறித்து கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்துகின்றனர். இந்த ஆய்வு மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டத்தின் கருத்துகள், மனுக்களின் அடிப்படையிலான ஆய்வறிக்கை 6 வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வினை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலைப்பகுதி, கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை, அசம்பாவிங்களைத் தவிர்த்திடும் வகையில் 2 வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க