`சிறந்த சர்வதேச நடிகர் விருது' - விஜய்க்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாராட்டு! | vijakanth Appreciate actor vijay for winning iara awards

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (23/09/2018)

கடைசி தொடர்பு:13:30 (23/09/2018)

`சிறந்த சர்வதேச நடிகர் விருது' - விஜய்க்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் பாராட்டு!

சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் விஜய்க்கு, தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்

சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பட்டியலில்,  சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்காக இணையத்தில் வாக்குப் பதிவும் நடத்தப்பட்டது.  இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் விஜய் சிறுவயதிலிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, ``சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து மற்றொரு பதிவில், ``மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.