தாமிரபரணி புஷ்கரம் விழா! - 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் நடந்த கால் நாட்டும் விழா | Pooja made for Thamiraparani pushkaram festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (24/09/2018)

கடைசி தொடர்பு:18:50 (24/09/2018)

தாமிரபரணி புஷ்கரம் விழா! - 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகளுடன் நடந்த கால் நாட்டும் விழா

தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் படித்துறை உள்ளிட்ட 14 படித்துறைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கால் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

புஷ்கரம் விழா கால் நாட்டுதல்

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது. 144 வருடங்களுக்குப் பின்னர், தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா கொண்டாட இந்து அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அக்டோபர் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த விழா நடக்க இருக்கிறது. புன்னக்காயல் வரை பாய்ந்தோடும் தாமிரபரணி நதியில், நூற்றுக்கும் அதிகமான தீர்த்தக் கட்டங்கள் உள்ளன, அவற்றின் முக்கியத்துவம் கருதி அந்த இடங்களில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

தாமிரபரணி ஆற்றில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் பல இடங்களிலும் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை புஷ்கர விழாக்குழுவினர் சீரமைத்து வருகிறார்கள். அதனால் தாமிரபரணி நதியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட படித்துறையில் சிறப்பு பூஜைகள் செய்யும் அளவுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புஷ்கர விழாவின்போது, படித்துறைகளில் சுவாமி எழுந்தருளல், நதி ஆரத்தி ஆகியவை தினமும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 14 படித்துறையிலும் ஆதீனங்கள், வைணவ மடாதிபதிகள், சிவனடியார்கள் பங்கேற்று தினமும் பூஜைகள் நடைபெற உள்ளன. அதனால் படித்துறைக்கான பூர்வாங்கப் பணிகள் கால்கோள் நாட்டுதலுடன் இன்று தொடங்கியது. பாபநாசம் படித்துறையில் சுவாமி ரமானந்த சரஸ்வதி, குறுக்குத்துறை படித்துறையில் சுவாமி பக்தானந்த மஹராஜ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து கால்கோள் நாட்டி விழாவைத் தொடக்கி வைத்தனர்.