வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:24 (25/09/2018)

`நல்லா கவனிக்கிறாங்களா?' - விசாரித்த விஜயபாஸ்கருக்கு நோயாளியின் அதிர்ச்சி பதில்

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ``கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள மகப்பேறு மையம் இங்கே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தாய்ப்பால் வங்கி தொடங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தாய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஆக்ஸிடெண்ட் டிராமாகேர் இனிஸியேட்டிவ் என்று சொல்லக்கூடிய விபத்து காய சிகிச்சை மையங்களில் ஒன்றாக இந்தக் கும்பகோணம் அரசு மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்

கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு 34 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் 30 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அந்த 4 மருத்துவர்கள் உயர் பதவிக்கான மருத்துவர்கள் அவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் என்பது கிடையாது. பெருகி வரும் நோயாளிகளைச் சமாளிக்க கூடுதல் மருத்துவர்கள் தேவை என்பதால் கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. 

விரைவில் 1,800 எம்.பி.பி.எஸ் மருத்துவர்களும் 4,000 செவிலியர்களும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் போது கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தக்கூடிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான். மத்திய அரசு சார்பாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அனைத்துத் துறை அதிகாரிகளும் தமிழக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறி பாராட்டினர். தற்போது வரை 1.5 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.  

காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள், காப்பீட்டு அட்டையைத் தொலைத்தவர்கள், பழைய காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கலெக்டர் அலுவலகங்களுக்குச் சென்று 10 மணி நேரத்துக்குள் புதிய காப்பீட்டு அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கேட்ட அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது. விரிவான அறிக்கை திட்டம் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கப்பட்ட காலத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மயிலாடுதுறை எம்.பி ஆர்.கே.பாரதிமோகன், கலெக்டர் அண்ணாதுரை, டாக்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர். 

மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர சிகிச்சை பிரிவுக்குச் சென்று  ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரிடம் மருத்துவர்கள் எவ்வாறு சிகிச்சை அளிக்கிறார்கள் அவர்களது கவனிப்பு எப்படி உள்ளது எனக் கேட்டார். அதற்கு அந்த நோயாளி சரியான கவனிப்பு இல்லை என்றும் இதற்குத் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று இருப்பேன் என அவரிடம் குற்றம் சாட்டினார். அதற்கு முறையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்திச் செல்கிறேன் என நோயாளியிடம் கூறினார். 

விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். அவசர சிகிச்சைப் பிரிவில் ஐசியூ பிரிவுக்கு ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி, மாவட்டக் கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது மருத்துவ நிலைய அலுவலர் பிரபாகரன், அமைச்சர் துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோரைத் தள்ளிவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கரை மட்டும் ஐசியூ பிரிவுக்குள் அழைத்துச் சென்றார். 

உள்ளே சென்ற விஜயபாஸ்கர் நோயாளியிடம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது வெளியில் நின்றுகொண்டிருந்த துரைக்கண்ணுவை மெதுவாக உள்ளே அழைத்தார் பிரபாகர். அதற்கு துரைக்கண்ணு உள்ளே வர மறுத்து, நிலைய அலுவலர் பிரபாகரனிடம் நீயே பார்த்துக்கொள் நாங்கள் உள்ளே வர மாட்டோம் புரோட்டோகால் (protocol) என்றால் என்ன என்று தெரியுமா என்று அவரை முறைத்தபடி ஆவேசமாகப் பேசினார். பின்னர் நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகரன் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி பாரதிமோகன் ஆகியோரிடம் என்னை மன்னித்துக் கொள்ளும்படி கூறினார். இருந்தும் ஆவேசம் அடைந்த அவர் உள்ளே வர மறுத்து வெளியிலேயே நின்றனர். அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சமாதானம் செய்து உள்ளே அழைத்துச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் ஆய்வைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 6 கோடி மதிப்பிலான அதிநவீன  வசதிகள் கொண்ட எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நார்மல் மிஷின் உடல் முழுவதையும் ஸ்கேன் செய்ய அரை மணி நேரம் ஆகும். ஆனால் இந்த ஸ்கேன் மிஷின் பத்து நிமிடத்திற்குள்ளேயே ஸ்கேன் செய்து விடும். தமிழகத்திலேயே முதல்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்த கூடிய அதிநவீன சிறப்புப் பிரிவு தொடங்குவதற்கு 18 கோடி நிதி ஒதுக்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் நானு மாதத்திற்குள் அந்த பிரிவி செயல்பட்டுக்கு வரும்" என்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக காலை 7 மணிக்கெல்லாம் மருத்துவ கல்லூரி நிர்வாகம் துப்புரவு பெண் பணியாளர்கள் 10 பேரை  வரவைத்தனர். அவர்களுக்கு  காலை டிபன் உள்ளிட்ட எதுவும் கொடுக்கபடவில்லை என தெரிகிறது. இது குறித்து அவர்களிடம் பேசியபோது, "அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த பகுதியை  சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். நாங்களும் செய்து கொண்டு இருந்தோம். அமைச்சர் மதியம் 1.30 மணிக்கு தான் வந்தார். அவர் புதிய பிரிவை திறந்து வைத்ததும் அவருக்கும் அவருடன் வந்தவர்கள் அனைவருக்கும் இளநீர் கொடுத்து மரியாதை செய்தனர். ஆனால் எங்களை போன்றவர்களுக்கு பச்ச தண்ணீர்கூட கொடுக்கவில்லை. காலையில் இருந்து வயிறும் நாக்கும் காய்ஞ்சு போச்சு" என புலம்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க