குட்கா, பான்மசாலா பொருள்களை விற்றால் கடை உரிமம் ரத்து! - கரூர் ஆட்சியர் எச்சரிக்கை | Karur collector warns shop owners over pan masala, gutkha sales

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (25/09/2018)

கடைசி தொடர்பு:22:30 (25/09/2018)

குட்கா, பான்மசாலா பொருள்களை விற்றால் கடை உரிமம் ரத்து! - கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

குட்கா   

 கரூர் ஆட்சியர் அன்பழகன்குட்கா விவகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காலை சுற்றிய பாம்பாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ``குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா விற்றால் உணவு வணிகர்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும்" என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ``தமிழ்நாட்டில் குட்கா, நிகோடின் பாக்கெட்டுகளுடன் கூடிய பான்மசாலா, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவற்றை உள்ளடக்க பொருள்களாகக் கொண்ட உணவுப் பொருள்களை விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தடை செய்யப்பட்ட பொருள்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, வாகனங்களில் கொண்டு செல்வது, விநியோகிப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது குற்றமாகும். அவ்வாறு செய்தால், சம்பந்தப்பட்ட உணவு வணிகரின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும்.

இதன் மூலம் உணவு வணிகர்கள் தமது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாமல் போகும். சில இடங்களில் உணவு வணிகர்கள் தவிர மொபைல் கடைகள், காலணி விற்பனையகம், பேன்ஸி ஸ்டோர் மற்றும் ஹார்டுவேர் போன்ற உணவு வணிகர்கள் அல்லாதோர் கடைகளில் இந்தப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்களது தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும். சிலர், குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்டப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் பெறப்படுகிறது. இனிவரும் காலங்களில் எந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீடு மூடப்பட்டு 'சீல்' வைக்கப்படும். இதுதவிர அந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் மேற்காண் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை மற்றும் உணவுப் பொருள் தொடர்பான அனைத்து புகார்களையும், உணவுப் பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.