`என் அறையைவிட விசாரணைக் கைதிகளின் அறை படுமோசம்!'- விடுதலையான முகிலன் பேட்டி | madurai jail mukilan press meet

வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (26/09/2018)

கடைசி தொடர்பு:17:38 (26/09/2018)

`என் அறையைவிட விசாரணைக் கைதிகளின் அறை படுமோசம்!'- விடுதலையான முகிலன் பேட்டி

முகிலன்

தமிழகத்தின் மிக முக்கிய சூழலியல் போராளியும் அணு உலைப் போராட்டத்தில் பங்கேற்ற முகிலன் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜூலை மாதம் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்  இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று வெளிவந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மதுரை சிறையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு உளவியல் ரீதியான சித்ரவதைகளைச் செய்தனர். தனிமைப்படுத்துதல் சுகாதாரமற்ற பகுதியில் அடைத்து வைத்தல் என்ற பல்வேறு சித்ரவதை செய்தனர். என்னைப் பார்க்க வருபவர்களைகூட உளவுத் துறையினர் விசாரணை செய்வதாக புகார் வந்தது. மேலும், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத தனிச் சிறையில் அடைத்தனர்.

மதுரை சிறை வந்தடைந்த சில நாள்களில் என்னைப் பார்க்க வந்த வைகோவிடம் நான் படும் சித்ரவதையைக் கூறினேன். அதைத் தொடர்ந்து அவர் வழக்கு தொடர்ந்தார். சுகாதாரமற்ற முறையில் நான் இருப்பதை நீதிமன்ற பார்வைக்கு எடுத்துச் சென்றார். 20-க்கும் மேற்பட்ட நாள்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மனநிலை பாதிக்கப்படும் வகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். சிறையில் நான் இருந்த அறையைவிட விசாரணைக் கைதிகள் இருந்த பகுதி மோசமாக இருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி, நாங்கள் நேரில் வந்து பார்வையிட வருகிறோம் என்று கூறியவுடன் நூற்றுக்கணக்கான கைதிகளை வைத்து மிகப்பெரிய மாற்றங்களைச் சிறைக்குள் ஏற்படுத்தினர். அதிகாரிகளின் துணை இல்லாமல் எந்த ஒரு தவறும் நடைபெறாது. மதுரை சிறையில் உணவு மிகவும் மோசமாக இருக்கும். பாளையங்கோட்டை சிறை உணவு சிறப்பாக இருந்தது. நான் மதுரையில் 40 சதவிகிதம் மட்டுமே உணவு சரியாக இருந்தது. இது பற்றி நீதிபதியிடமே எழுத்துபூர்வமாக புகார் அளித்திருக்கிறேன். சிறையில் அதிகாரிகள் இரண்டு குழுவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு லஞ்சத்தைப் பிரித்துக் கொள்வதில் பிரச்னை ஏற்படுவதால்தான் சில சம்பவங்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. சட்டத்தை ஆளுகின்ற அரசு  சட்டத்தை மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கிறது'' என்று தெரிவித்தார்.