முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன்! | Karunas gets Bail 

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (28/09/2018)

கடைசி தொடர்பு:12:03 (28/09/2018)

முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் கருணாஸுக்கு ஜாமீன்!

முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாகப் பேசிய வழக்கில், எம்.எல்,ஏ கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கருணாஸ் 
 

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். ஆர்ப்பாட்ட மேடையில் பேசிக்கொண்டிருக்கையில், சற்று ஆவேசமடைந்த கருணாஸ், காவல் துறை அதிகாரி அரவிந்தன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒருகட்டத்தில் அவர்களை மிரட்டும் தொனியிலும் பேசினார்.  இதேபோல சாதிய அமைப்புகள் குறித்தும் விமர்சித்துப் பேசினார். கருணாஸின் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. நாடார் அமைப்புகள் உள்ளிட்டவையும் கருணாஸுக்கு எதிராக போர்கொடி தூக்கின. 

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி கருணாஸை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.  இதனிடையே, போலீஸார் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரினர். ஆனால், நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்தது.  இதையடுத்து,  திருவல்லிக்கேணி காவல்துறை கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மீண்டும் அவர்  கைதுசெய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னர், ஐபிஎல் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் ரசிகர்களைத் தாக்கியதாகக் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர்மீது அந்த இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.  இதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல்செய்துள்ள மனு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க