போதைப்பொருள் வழக்கில் போலி ஆவணம் சமர்ப்பிப்பு! - கோவை வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை | Coimbatore Police enquiry with Advocate Zakaria

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (28/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (28/09/2018)

போதைப்பொருள் வழக்கில் போலி ஆவணம் சமர்ப்பிப்பு! - கோவை வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை

போதைஊசி வழக்கு விவகாரத்தில், வழக்கறிஞர் ஜக்காரியாவிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை போலீஸ்

கோவையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக, அவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக வழக்கறிஞர் ஜக்காரியா நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல்செய்திருந்தார். ஆனால், இந்த ஆவணங்கள்குறித்து சந்தேகம் அடைந்த நீதிபதிகள், காட்டூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் உண்மைத்தன்மை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டார்.

காவல்துறை விசாரணையில், இந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஜக்காரியா, கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர் பீர் முகமது ,டாக்டர் டி.சி ராமகிருஷ்ணன், டாக்டர் எஸ்.உஷா கோவை அரசு மருத்துவமனை, டாக்டர் மன்சூர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் முஹம்மது சாஹிப் ஆகியோர் இணைந்து போதைமருந்து குற்றவாளியை விடுவிக்க போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்தது.

அவர்கள்மீது போலியான ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய, இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி் சஞ்சய் பாபா உத்தரவிட்டார். இதன்பேரில், அவர்கள்  6 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் ஜக்காரியாவிடம் விசாரணைசெய்துவந்தனர். அப்போது, அவர் உடல்நிலை மோசமானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.