ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு? | The tenure of Arumugasamy commission will be extended again?

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (29/09/2018)

கடைசி தொடர்பு:15:20 (29/09/2018)

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அதுபற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம், மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

நீதிபதி ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம்குறித்து அப்பல்லோ மருத்துவர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஜெயலலிதாவின் தனி உதவியாளர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையும் நடத்திவருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் (அக்டோபர்)    24-ம் தேதியுடன் ஆணையத்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. என்றாலும், இதுவரை சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடைபெற வேண்டும். லண்டனில் இருந்து வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் இன்னும் 25 நாள்களுக்குள் முடிக்க வாய்ப்பில்லை என்பதால், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில், தமிழக அரசிடம் மீண்டும் பதவிக்காலத்தை நீட்டிக்க முறைப்படி கோரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தமுறை, அரசுத்தரப்பில் காலநீட்டிப்பு வழங்கப்பட்டாலும், ஆணையத்தின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல்செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும் என்று அரசுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி நீட்டிக்கப்படுமா அல்லது எல்லா ஆணையங்கள் தாக்கல் செய்யும் அறிக்கையைப் போன்று இந்த ஆணையத்தின் அறிக்கையும் கிடப்பில் போடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....

நீங்க எப்படி பீல் பண்றீங்க