வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (30/09/2018)

கடைசி தொடர்பு:07:09 (01/10/2018)

ரன்வீர் ஷாவின் திருவையாறு அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் ஆய்வு!

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் தொழிலதிபரும் நடிகருமான ரன்வீர் ஷா. இவர்  வீட்டில் சில தினங்களுக்கு முன் 100 கோடி மதிப்புள்ள 89 சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பெரிய கோயிலில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, திருவையாறில் உள்ள ரன்வீர்  ஷாவிற்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். 

பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்பாக  நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த  தீனதயாளன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும்  ரன்வீர்ஷா  வீட்டில் கடந்த  2016 ஜூலை மாதம் சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இதற்காக  ரன்வீர் ஷா கொடுத்த ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும் கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ரன்வீர் ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில்  89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் சோழர் காலத்து சிலைகள் என்றும் அதன்  தற்போதைய மதிப்பு 100 கோடி. இருக்கும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று தஞ்சாவூர் பெரியகோயிலில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பொன்.மாணிக்கவேல் ஆய்வு  செய்தார். ரன்வீர் ஷா வீட்டில் இருந்த சிலைகள் பெரிய கோயிலுக்குச் சொந்தமானவையா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருவையாறு காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தியதோடு, அங்கு ஏதேனும் சிலைகள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அரண்மனையை கவிதா என்கிற பெண் கவனித்து வருகிறார். அவரிடம் பொன்.மணிக்கவேல், `ரன்வீர் ஷா எப்போதெல்லாம் இங்கு வருவார்’ என கேட்டார். அதற்கு அவர், `வருடத்திற்கு ஒரு முறை வருவார்’ என தெரிவித்தார். மேலும் இங்கு சிலைகள் எதுவும் வைக்கபட்டிருந்தனவா என்றும், சிலைகள் எதுவும் எடுத்து செல்லப்பட்டதா என்றும் கேட்டார். அதற்கு இல்லை என தெரிவித்தார் கவிதா. `விசாரணையில் எதையும் மறைக்கக்கூடாது. அப்படி மறைத்து அதை நாங்கள் கண்டு பிடித்தால், அப்புறம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கவிதாவை எச்சரித்த பொன்.மாணிக்கவேல், அரண்மனைக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்திய பிறகு கிளம்பிச் சென்றார்.

இதுகுறித்து விபரமறிந்தவர்களிடம் பேசினோம்.`ரன்வீர் ஷாவுக்குச் சொந்தமாகத் திருவையாறு மற்றும் திருவாரூரில் பழங்கால அரண்மனைகள் உள்ளன. திருவையாறில் உள்ள அரண்மனை மன்னர் சகாஜி நாயக்கர் என்பவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த  அரண்மனையை சுமார் 5 வருடங்களுக்கு முன்பு ரன்வீர் ஷா வாங்கியதோடு, பழமை மாறாமல் புதுபிக்கும் பணியை இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினார்.    

காவிரி ஆற்றின் கரையில் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த அரண்மனை. மேலும், ப்ரக்ருதி பவுண்டேஷன் என்ற  அமைப்பை நடத்தி வரும் ரன்வீர் இன்னும் சில அமைப்புகளுடன் இணைந்து வருடத்திற்கு 3 நாள்கள் திருவையாறின் வெவ்வேறு இடங்களில் `மரபு மாறா இசை நிகழ்ச்சி’ என்ற பெயரில் பழங்கால இயற்கை இசைக் கருவிகளைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துவார். இந்த நிகழ்ச்சி ரொம்பவே பிரபலம் .அந்த சமயத்தில் வெளிநாட்டினர் பலர், இங்கு வந்து செல்வார்கள். சென்னையில் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் கைபற்றப்பட்டதால், இங்கும் வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோல் ரன்வீர் ஷாவின் திருவாரூர் அரண்மனையிலும் ஆய்வு நடத்த இருக்கிறார்கள்’’ என்றனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க