`குப்பை வண்டியை எடுத்துட்டு வாங்க; மூதாட்டி உடலை மார்ச்சுவரில் வைத்திடுங்க!'- தஞ்சாவூர் அவலம் | Dead Elderly woman carried in garbage cart in Tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (01/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (01/10/2018)

`குப்பை வண்டியை எடுத்துட்டு வாங்க; மூதாட்டி உடலை மார்ச்சுவரில் வைத்திடுங்க!'- தஞ்சாவூர் அவலம்

தஞ்சாவூரில் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த  மூதாட்டி ஒருவரின் உடலை போலீஸார், மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி உடல்

தஞ்சாவூரின் மையப் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தின் நடைமேடையில் சில தினங்களாக மூதாட்டி ஒருவர்  உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்துக் கிடந்தார். நடைப்பாலத்தில் தினமும் காலை, மாலை என பலர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அப்படிச் சென்றவர்கள் மூதாட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டதோடு அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்து வந்தனர். ஆனால், அந்த உணவை அவரால் சாப்பிட முடியவில்லை. இதனால் மேலும் அவரது உடல் நிலை மோசமானது.

இந்த நிலையில், நேற்று அதே இடத்தில் அந்த மூதாட்டி இறந்து கிடந்தார். இதைப் பார்த்த நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்ததோடு மாநகராட்சி அலுவலர்களுக்கும் மற்றும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், உடனே 108 ஆம்புலன்ஸ் உட்பட யாரும் வரவில்லை. இதனால் மூதாட்டியின் உடலில் ஈ மொய்க்க ஆரம்பித்தது. இதையடுத்து, மதியத்துக்கு மேல் வந்த போலீஸார், மாநகராட்சி ஊழியர்களிடம் சொல்லி குப்பை வண்டியை எடுத்து வரச் செய்தனர். குப்பை வண்டி வந்ததும் மாநகராட்சி ஊழியர்களிடம் உடலை குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் கொண்டு ஒப்படைத்து விடுங்கள் என கூறிவிட்டுச் சென்றனர். அதேபோல் அவர்கள் துணியால் உடலைச் சுற்றி குப்பை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

அப்பகுதியில் இருந்து இதைப் பார்த்தவர்கள் மனித உடலை குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றிச் செல்கிறார்களே என மிகவும் மனம் வேதனையடைந்தார்கள். இது குறித்து சிலர் கூறுகையில், ``மூதாட்டி இறந்த தகவல் காலையில்  கொடுக்கப்பட்டும் அதிகாரிகள் யாரும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தார்கள். தாமதமாக வருபவர்கள் உடலை எடுத்துச் செல்வதற்கு முறையான ஏற்பாட்டோடு வந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. கொஞ்சம்கூட மனிதாபிமானமற்ற முறையில் மனித உடலை குப்பையாக நினைத்துக்கொண்டு குப்பையை அள்ளிப்போட்டு கொண்டு செல்வதுபோல் எடுத்துச் சென்றது வேதனையடைய வைத்ததோடு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க