வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (01/10/2018)

கடைசி தொடர்பு:12:50 (04/10/2018)

`உங்கள் எம்.எல்.ஏ மீது எஃப்.ஐ.ஆர்!' - உ.பி முதல்வருக்கு தர்மபுரி சிங்கத்தின் மெசேஜ்

பகலில் எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தால் நிச்சயம் சண்டைக்கு வந்திருப்பார்கள். அதனால், விடியற்காலை 2 மணி முதல் 6 மணிக்குள் பதிவு செய்துவிட்டு, இந்தத் தகவலை சி.எம் அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துவிட்டார் முனிராஜ்.

`உங்கள் எம்.எல்.ஏ மீது எஃப்.ஐ.ஆர்!' - உ.பி முதல்வருக்கு தர்மபுரி சிங்கத்தின் மெசேஜ்

த்தரபிரதேசத்தைக் கலக்கி வரும் தமிழ் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. 'மொகரம் பண்டிகையின்போது நடக்கவிருந்த கலவரத்தைக் கட்டுப்படுத்தி, ஆளும்கட்சியினர் மீதே வழக்கு போட்டுவிட்டார். இப்படிப்பட்ட அதிகாரியை மாற்றம் செய்வற்குத் திட்டமிட்டுள்ளனர்" என வேதனைப்படுகின்றனர் பொதுமக்கள். 

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த முனிராஜ், இன்று `உ.பி-யின் சிங்கம்' என ஊடகங்களால் பாராட்டப்படுகிறார். உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நேரத்தில், `கிரிமினல்களை ஒடுக்குங்கள்' எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி நடந்த முதல் என்கவுன்ட்டரை முன்னின்று நடத்தியது முனிராஜ் டீம். புலந்தர்ஷெகர் மாவட்டத்தில் இருந்தபோது ஏறக்குறைய 35 என்கவுன்டர்களை இவர் நடத்தியிருக்கிறார். இதுதொடர்பாக சர்ச்சை வந்தபோதும், `முட்டிக்குக்கீழ்தான் சுடுவோம். உயிரை எடுப்பது எங்கள் நோக்கமல்ல. ஆபத்து அதிகமாக இருக்கும்போது மட்டும்தான் சுடுவோம்' என்கிறார் முனிராஜ். 

ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய கடந்த ஒன்பது வருடங்களில் 12 டிரான்ஸ்ஃபர்களை சந்தித்துவிட்டார். இப்போதும், `முனிராஜை மாற்றியே தீர வேண்டும்' என முதல்வர் அலுவலகத்திலேயே முகாமிட்டிருக்கிறார் உள்ளூர் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான பப்பு பர்தோல் என்கிற ராஜேஷ் மிஸ்ரா. 'என்னதான் பிரச்னை?' என முனிராஜ் வட்டாரத்தில் பேசினோம். "மதக் கலவரத்தைக் கட்டுப்படுத்தியதுதான் காரணம். இந்தியாவிலேயே மதக் கலவரங்கள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் முக்கியமானது உ.பி. இரண்டு விஷயங்களுக்காக இங்கு கலவரம் நடக்கும். ஒன்று, காவடி எடுக்கும்போது, இன்னொன்று மொகரம் பண்டிகையின்போது உள்ளூர் அரசியல்வாதிகளின் தூண்டுதலிலேயே இந்தக் கலவரங்கள் அரங்கேறும். கடந்த வெள்ளிக்கிழமை (21.9.2018) அன்று மொகரம் பண்டிகையின்போது பரேலி மாவட்டத்தில் நள்ளிரவில் ஊர்வலம் சென்றுள்ளனர் இஸ்லாமியர்கள். 

முனிராஜ்இந்தச் சமயத்தில் கலவரம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் பா.ஜ.க எம்.எல்.ஏ பப்புவும் அவரின் மகனும். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகளும் அலர்ட் கொடுத்தனர். பண்டிகை நடந்த நாளில், 'பரேலி மசூதியை உடைத்துவிட்டார்கள்' என வாட்ஸ்அப் மூலம் வதந்தி ஒன்று பரவியது. இதைக் கேட்டு மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆயுதங்களோடு திரண்டுவிட்டனர். பா.ஜ.க எம்.எல்.ஏ பப்புவும் ஆயுதங்களோடு ஆள்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர் போலீஸார். அவர்களை வரவிடாமல் டிராக்டர்களைக் கொண்டு பாதையை மறைத்துவிட்டனர் பப்பு தரப்பினர். இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற பரேலி மாவட்டத்தின் எஸ்.எஸ்.பி முனிராஜ், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டார். அங்கிருந்த போலீஸாரிடம், 'முதலில் பிளாஸ்டிக் குண்டுகளால் சுடுங்கள். உயிர்ச் சேதம் நடந்தால் நிலைமை சிக்கலாகிவிடும்' என உத்தரவிட்டார். பிளாஸ்டிக் குண்டுகளால் சுடத் தொடங்கியதும், கலவரக்காரர்களில் பலரும் கரும்பு காட்டுக்குள் ஓடிவிட்டனர். இதில், எம்.எல்.ஏ ஆள்களும் ஓடிவிட்டனர். அங்கு சிக்கியவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான பப்பு மீது, நள்ளிரவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார் எஸ்.எஸ்.பி முனிராஜ். 

பகலில் எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தால் நிச்சயம் சண்டைக்கு வந்திருப்பார்கள். அதனால், விடியற்காலை 2 மணி முதல் 6 மணிக்குள் பதிவு செய்துவிட்டு, இந்தத் தகவலை சி.எம் அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்துவிட்டார் முனிராஜ். கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவுக்கு பரேலியில் நடக்க இருந்த கலவரத்தைத் தடுத்துவிட்டார். அதைவிட, ஆளும்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குப் போட்டுவிட்டதை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சிங்கம் பட போஸ்டரில் இருக்கும் அஜய் தேவ்கனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் முனிராஜ் முகத்தை மாஃர்பிங் செய்து கொண்டாடுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் முதல்வர் அலுவலகத்திலேயே காத்திருக்கிறார் பப்பு பர்தோல். நாங்கள் முனிராஜிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது வாட்ஸ்அப்புக்கு ஏதோ மெசேஜ் வந்துள்ளது. 'டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்' என மனைவியிடம் கூறிக்கொண்டே பிரித்துப் பார்த்தவர், 'ஆறு அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர். என்னை இன்னும் மாத்தலை' என சிரித்தபடியே கூறினார். அவரை மாற்றம் செய்வதில் பொதுமக்களுக்கு உடன்பாடில்லை" என்றவரிடம், 

` மசூதியை உடைத்துவிட்டார்கள் எனப் பரவிய வாட்ஸ்அப் வதந்தியை எப்படிக் கட்டுப்படுத்தினார் முனிராஜ்?' என்றோம். 

`` அது ரொம்பவே சிம்பிள். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் வாட்ஸ்அப்புக்கென்று தனியாக குழு ஒன்றை அமைத்தார் முனிராஜ். அதில், காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மதிப்புமிக்க நபர்கள், 250 பேரை அந்தக் குழுவில் சேர்க்க வேண்டும். பரேலி மசூதியை இடித்ததாகத் தகவல் பரவியபோது, வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்றை அனுப்பினோம். அதில், 'காவல்துறையின் முக்கிய அறிவிப்பு. மசூதி இடிப்பு குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்தபோது, இது முழுக்க முழுக்கத் தவறான தகவல். இந்த வதந்தியைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்' எனப் பதிவு செய்தோம். இந்தத் தகவலைக் குழுவில் உள்ளவர்கள் வெவ்வேறு குழுக்களுக்கு அனுப்புவார்கள். எங்கள் மெசேஜ் காட்டுத் தீயாகப் பரவிவிடும். அவ்வளவுதான்" என்றார் நிதானமாக.