`ரூ.67 கோடி நிதி ஒதுக்கியும் கல்லணையில் தரமற்ற பாலம்!’ - தி.மு.க குற்றச்சாட்டு | DMK Staged protest over new bridge in Kallanai

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (01/10/2018)

கடைசி தொடர்பு:23:30 (01/10/2018)

`ரூ.67 கோடி நிதி ஒதுக்கியும் கல்லணையில் தரமற்ற பாலம்!’ - தி.மு.க குற்றச்சாட்டு

கல்லணை கொள்ளிடம் ஆறுகளை இணைக்கும் வகையில், 67 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய உயர்மட்ட பாலம், தரமற்ற முறையில் கட்டப்படுவதாகக் கூறி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்த போதும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க ஆர்ப்பாட்டம்

கல்லணை மற்றும் கொள்ளிடம் ஆற்றை இணைக்கும் வகையிலும், திருச்சி  மற்றும் தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் வகையிலும் கல்லணை வழியாகக் கனரக வாகனங்கள் வந்துசெல்வதற்கு வசதியாக, புதிய உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் மூன்று கனரக வாகனங்கள்  செல்லும் வகையிலும் சுமார் 1,050 மீட்டர் நீளம் கொண்டதாகப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு பில்லரில் இருந்து  மற்றொரு பில்லருக்கு  இடையே 42 மீட்டர் இடைவெளி விட்டும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும்போது, தண்ணீரின்  வேகத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் 24 பில்லர்கள் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டன. 

கல்லணை பாலம்

பாலத்தின் மேல் பகுதியில் பொருத்துவதற்காக, 100 கான்கிரீட் பீம்கள் செய்து வைக்கப்பட்டிருந்தது. கிரேன் கொண்டு 58 கான்கீரிட் பீம்கள் மேல் பகுதியில் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கொள்ளிடம் ஆற்றில் தண்ணிர் திறந்து விடப்பட்டது. இதில், கீழே இருந்த கான்கிரீட் பீம்கள் அனைத்தும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. தண்ணீரில் கிடந்த பல பீம்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரம் இல்லாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

இதைக் கண்டித்து தஞ்சாவூர் தி.மு.க சார்பில் தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவதாகக் கூறி, கல்லணை கரிகால் சோழன் மணிமண்டபம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்குக் காவல் துறையினர் அனுமதி தரவில்லை. ஆனாலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடித்து, தரமற்ற பாலம் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பாலத்தின் பீம்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதோடு, தமிழக அரசும் நெடுஞ்சாலைத்துறையும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

தி.மு.க-வினர் சிலர், ''மக்கள் பயன்பாட்டுக்காக பல கோடி நிதி ஒதுக்கி கட்டப்படும் இந்தப் பாலத்தை அதிக அக்கறை எடுத்துக் கட்டாமல், மெத்தனத்தோடு தரமற்ற முறையில் கட்டுகின்றனர்.இது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பெரிய விபரீதத்தை உண்டாக்கும். எனவே, இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல், தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு தரமான முறையில் பாலம் கட்டுவதற்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். இதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க