அரியலூரில் இரவு நேரத்தில் திருட முயன்ற வெளிமாநிலத்தவர் 5 பேர் கைது

அரியலூர்: அரியலூரில் இரவு நேரத்தில் தூக்கிக்கொண்டிருந்தவர்களின் காது, கழுத்தில் கிடந்த நகைகளை திருட முயன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூரில் ராம்கோ சிமெண்ட் ஆலையின் கட்டுமானப் பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு பத்தரை மணிக்கு ஸ்பெக்ட்ரான் கட்டுமானப் பிரிவில் வேலை பார்க்கும் சேப்பன் காசி, மிதிராதேவ், அக்கிஸ் குடியா, பிஷ்னு குடியா, ராஜேந்திர சாகுப் ஆகிய 5 பேர் சேர்ந்து தொழிற்சாலைக்கு பக்கத்திலுள்ள சுப்புராயத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வீட்டில் இரவு நேரத்தில் திருடுவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் ராஜேந்திரனின் மனைவி தனலட்சுமி, மகள், ராஜேந்திரனின் அம்மா ஆகியோர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 5 பேரில் ஒருவன், மூதாட்டியின் காதை அறுக்க முயற்சி செய்திருக்கிறான். இன்னொருவன், தனலட்சுமியின் கழுத்தில் இருந்த நகைகளை கழற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறான்.

இதை உணர்ந்து, சுதாரித்துக் கொண்ட தனலட்சுமி குடும்பத்தார் இரண்டு பேரை வீட்டிற்குள் தள்ளிவிட்டு கதவை இழுத்து பூட்டிவிட்டனர். உடனடியாக ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர். இவர்கள் கூச்சலிட்டதன் காரணமாக பொதுமக்களும் திரண்டு விட்டனர். அவர்கள் இரு திருடர்களையும் அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி, மற்ற மூன்று பேரையும் கைது செய்தார். அவர்கள் 5 பேரும் திருட, வந்தார்களா? இல்லை இதற்கு முன்பும் பல இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.ராமசாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!