அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் இல்லை: ஸ்டாலின் நகைக்சுவை பேச்சு (படங்கள்)

சென்னை: நான்  மேயராக இருந்தபோது குறைகளை களைய காரில் உள்ள மைக்கை பயன்படுத்தினேன், தற்போது, அம்மா உணவகத்தில் இட்லி இல்லை, சாம்பார் இல்லை, உடனடியாக கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகள் மைக்கை பயன்படுத்துகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நகைச்சுவையாக பேசினார்.

சென்னையில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், சற்குணபாண்டியன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், சென்னையில் எரியாத மின் விளங்குகள், தூர்வாரப்படாத மழைநீர் கால்வாய்கள், குடிநீரில் கழிவு நீர் கலக்க கூடிய அவலம் இதுதான் அ.தி.மு.க அரசி்ன் இன்றைய நிலை. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

சென்னையில் பெரும்பாலான சாலைகள் குண்டுகுழியுமாக காட்சி அளிக்கின்றன. கொசுத் தொல்லையை ஒழிக்க சென்னை மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது அம்மா உணவகம் என்ற பெயரில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள்.  இந்த திட்டத்தை பற்றி நான் குறைகூறுவதாக யாரும் நினைக்க வேண்டும்.

நானும், மா.சுப்பிரமணியனும் மேயராக இருந்தபோது எங்களுக்கு வழங்கப்பட்ட காரில் ஒரு மைக் இருக்கும். எங்களுக்கு மட்டும் அல்ல, மாநகராட்சி கமிஷனர், ஏசி , டிசி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் கார்களிலும் மைக் இருக்கும்.

இந்த மைக்கை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்றால், நாங்கள் செல்லும் வழியில், குப்பைகள் தேங்கி கிடந்தாலும், மின் விளக்கு எரியாமல் இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மைக்கில் தொடர்பு கொண்டு இவற்றை சரி செய்யும் படி உத்தரவிடுவோம். ஆனால் தற்போது அதிகாரிகள் அந்த மைக்கை எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் முடிந்து விட்டது உடனடியாக கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகள் மைக்கை பயன்படுத்துகிறார்கள்.

சிறை நிரப்பும் போராட்டம்!

சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கெட்டை சரி செய்யவில்லையென்றால் இந்த அறப்போராட்டம் மறியல் போராட்டமாக மாறும், இந்த அறப்போராட்டம் சிறை நிரப்பும் போராட்டமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் ஸ்டாலின்.

படங்கள்: வீ.நாகமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!