`அனிதா பெயரில் தட்டச்சுத் தொழிலகம்!’ - கரூர் வழக்கறிஞரின் முயற்சி | Karur lawyer starts typing class in the name of Ariyalur Anitha

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/10/2018)

கடைசி தொடர்பு:07:18 (03/10/2018)

`அனிதா பெயரில் தட்டச்சுத் தொழிலகம்!’ - கரூர் வழக்கறிஞரின் முயற்சி

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்று தனது உயிரையே மாய்த்துக்கொண்டு நீதி கேட்ட அரியலூர் அனிதா நினைவாக கரூர் வழக்கறிஞர் ஒருவர் தட்டச்சு தொழிலகத்தை அமைத்து நெகிழ வைத்திருக்கிறார்.

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்தவர் சதீசு. வழக்கறிஞரான இவர், தமிழ் உணர்வாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளரும்கூட. இவர்தான் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் எதிரில் டாக்டர் அனிதா நினைவு தட்டச்சு தொழிலகத்தை ஆரம்பித்து அசத்தி இருக்கிறார். நீட் தேர்வை கண்டித்து தனது அரசு ஆசிரியைப் பணியையே துறந்த சபரிமாலா ஜெயகாந்தனை அழைத்து வந்து இந்த தட்டச்சு தொழிலகத்தை திறந்து வைக்க வைத்தார். அதோடு, இங்கே உள்ள கணினிகளில் முகப்பு புகைப்படமாக அனிதா புகைப்படத்தையும் வைத்து, எல்லா இடங்களையும் அனிதாமயமாக்கி இருக்கிறார். நாம் வழக்கறிஞர் சதீசுவிடம் பேசினோம்.

``நான் தொழிலில் வழக்கறிஞராக இருந்தாலும், தமிழ் உணர்வாளராக அதிகம் செயல்படுகிறேன். மத்திய, மாநில அரசுகள், சட்டம் எல்லாம் கைவிட்டாலும், தனது உடலை மாய்த்துக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு போனார் அனிதா. அவர் இறந்தபோது, என்னால் சரியாக சாப்பிட முடியலை; தூங்க முடியலை. அனிதா உயிரோடு இருந்தபோது, அவருக்கு ஆதரவாக யாராலும் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் இருந்தது. அவர் இறந்தபோதுதான், எல்லோருக்கும் நீட்டுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கும் அப்படிதான் வந்தது.

அனிதாவையும் அவரது உயிர்த் தியாகத்தையும் அவர் ஆசைப்பட்ட கொள்கையையும் எல்லோருக்கும் பரப்ப, அவரை முன்னிலைப்படுத்தி ஏதாவது செய்யணும்ன்னு நினைச்சேன். அப்போதான், நான் ஆரம்பித்த இந்த தட்டச்சு தொழிலகத்துக்கு அனிதா பெயரை வைக்கணும்ன்னு முடிவெடுத்தேன். இங்குள்ள தமிழ் உணர்வாளர்களும் மற்ற வழக்கறிஞர்களும் அதை உற்சாகப்படுத்தினாங்க. அதனால், மருத்துவர் அனிதா நினைவு தட்டச்சு தொழிலகம் என்ற பெயரில் இதை ஆரம்பித்தேன். அதைச் சரியான நபரை வைத்து திறக்கணும்னு முடிவெடுத்தேன். அப்போதான் நீட் தேர்வை எதிர்த்து, அதற்காக தனது அரசு ஆசிரியைப் பணியையே ராஜினாமா செய்த சபரிமாலா ஜெயகாந்தனை வைத்து திறக்க நினைத்தேன். அதன்படியே அவரையே வைத்து திறந்தேன். ரொம்ப மகிழ்ச்சியா இந்த நிகழ்வில் அவர் கலந்துகிட்டார். அனிதா ஆசையை, போராட்டக் குணத்தை, கொள்கைத் தீயை எல்லோருக்குள்ளும் கடத்துவதே எனது இந்த முயற்சிக்கான அடிநாதம்" என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!