``ராமநாதபுரத்தில் நான் ஒருவனே எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்து சேவை செய்கிறேன்” - அமைச்சர்  மணிகண்டன் | Minister Manikantan slams karunas mla

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (03/10/2018)

கடைசி தொடர்பு:07:35 (03/10/2018)

``ராமநாதபுரத்தில் நான் ஒருவனே எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்து சேவை செய்கிறேன்” - அமைச்சர்  மணிகண்டன்

கூவத்தூர் விவரத்தை வெளியிடுவேன்  என  கருணாஸ் கூறுவது மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சிலைத் துப்புவது போன்றதாகும் என்று அமைச்சர்  மணிகண்டன் கூறினார்.

அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் பெரியகண்மாயில் தேக்கி வைக்கப்பட்டிருந்த வைகை அணைத் தண்ணீர் மீது மலர்களைத் தூவி, அத்தண்ணீரை நகராட்சி ஊருணிகளுக்குத் திறந்து விடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``சென்னையில் 2019-ம் ஆண்டு ஜனவரி  23, 24 -ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2015 -ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தினார். அந்த மாநாட்டுக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பத்துறையில் மட்டும் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 10,500 கோடி வரை முதலீடு செய்து அவையனைத்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதேபோல வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டிலும் பல தொழிலதிபர்களைப் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் சிங்கப்பூர் சென்று திரும்பினேன். இதன் பின்னர் கடந்த வாரம் முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கா சென்று டெக்ஸாஸ் மற்றும் ஜான்பிரான்சிஸ்கோவில் இருந்த பிரபலமான தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்களையும், வர்த்தக சங்க நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். அமெரிக்காவில் உள்ள தமிழ் மன்றத்திலும் பேசினேன். வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் செய்யும் முதலீடுகள் அனைத்துக்கும் உத்தரவாதமும் தருவதாக தெரிவித்துள்ளோம்.

மேலும், தமிழகத்தில் வசிக்கும் படித்த வேலையில்லாத இளைஞர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு பயிற்சிகள் வழங்கி அவர்களை மீண்டும் தமிழகத்துக்கு வர வைத்து தொழில்கள் துவங்க வைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்  மூலம்  தமிழகத்தில்  தகவல்  தொழில்நுட்பத்துறை  ஒரு  உயர்ந்த  இடத்துக்குச்  செல்லும்  வாய்ப்புகள்  பிரகாசமாக  இருக்கிறது.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திருவாடானை தொகுதியிலும், பரமக்குடி தொகுதியிலும் எம்.எல்.ஏ-க்கள் செயல்படவே இல்லை. சுருக்கமாக சொல்லப் போனால் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் நான் ஒருவனே எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்து என்னால் முடிந்த சேவைகளை மக்களுக்குச் சிறப்பாக செய்து வருகிறேன். பொறுப்பில்லாத எம்.எல்.ஏ-க்கள் ராமநாதபுரத்தில் உள்ளனர். கூவத்தூர்  விவரத்தை  வெளியிடுவேன்  என  கருணாஸ்  எம்.எல்.ஏ. கூறுவது மல்லாக்கப் படுத்துக்  கொண்டு  எச்சிலைத் துப்புவது போன்ற செயலாகும்'' என்றார்.