`மீண்டும் கைதாகிறாரா கருணாஸ்?' - சென்னைக்கு வந்த நெல்லை போலீஸ் | nellai police is in keen interest to arrest karunas

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (03/10/2018)

கடைசி தொடர்பு:10:37 (03/10/2018)

`மீண்டும் கைதாகிறாரா கருணாஸ்?' - சென்னைக்கு வந்த நெல்லை போலீஸ்

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கருணாஸ் மீது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் கைது செய்ய நெல்லை போலீஸார் சென்னைக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கருணாஸ்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும் செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளன்று முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி பூலித்தேவனின் 302-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த இடத்தில், தமிழ்நாடு தேவர் பேரவையைச் சேர்ந்தவர்களுக்கும் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்தச் சம்பவத்தில் தமிழ்நாடு தேவர் பேரவையைச் சேர்ந்த முத்தையா என்பவரது கார் சேதப்படுத்தப்பட்டது. 

அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அந்தச் சம்பவம் தொடர்பாக கருணாஸ் மீது புளியங்குடி போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வழக்கை நெல்லை மாவட்ட போலீஸார் தூசிதட்டியுள்ளனர். அதனால் புளியங்குடி டி.எஸ்.பி-யான ஜெயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கருணாஸை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நெல்லையில் இருந்து போலீஸார் சென்னைக்குச் சென்றுள்ளனர். நேற்று இரவு சென்னை சென்றடைந்த போலீஸார், விருகம்பாக்கத்தில் உள்ள கருணாஸ் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வந்துள்ள கருணாஸ் இன்று காலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு கையொப்பம் போடுவதற்காக வருகை தருவார். அந்தச் சமயத்தில் அவரை கைது செய்ய நெல்லை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.