வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (03/10/2018)

கடைசி தொடர்பு:13:54 (04/10/2018)

இன்ஜினீயரை மிரட்டி ரூ.10 லட்சம் `செக்'- சென்னை இன்ஸ்பெக்டர் மீது வழிப்பறி வழக்கு பதிவு!

இன்ஸ்பெக்டர் தாம்சன்

சிவில் இன்ஜினீயரை மிரட்டி செக்கை வாங்கிச் சென்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் உட்பட மூன்று பேர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கிழக்குத் தாம்பரம், இரும்புலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா. சிவில் இன்ஜினீயரான இவர், கடந்த 1-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், இன்ஸ்பெக்டர் தாம்சன், நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி 10 லட்சம் ரூபாய்க்கான செக்கை வாங்கிச் சென்றுவிட்டார். அவருடன் உதவியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செய்தி தொடர்பாளர் பாண்டியன், அவரின் மனைவியும் மாடலிங்கில் ஈடுபட்டுவரும் சஜினி என்பவரும் வந்தனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு என்னையும் குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின்பேரில் இணை கமிஷனர் மகேஸ்வரி விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீஸார் புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் தாம்சன், பாண்டியன், அவரின் மனைவி சஜினி ஆகியோர் மீது ஐ.பி.சி. 448,294 392,397, 506(1) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``முத்தையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாம்சன், பாண்டியன், சஜினி ஆகியோர் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், வழிப்பறி, மிரட்டல் என வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணைக்குப்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``இன்ஸ்பெக்டர் தாம்சனின் மகள் இங்கிலாந்தில் படித்தபோது தற்கொலை செய்துகொண்டார். தற்போது தாம்சன் மீது 10 லட்சம் ரூபாய்க்கான செக்கை முத்தையாவிடமிருந்து மிரட்டி பறித்துச் சென்றதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அவருடன் சென்ற மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம். தாம்சனிடம் விசாரித்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்றார்.  

சென்னையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் தாம்சன் மீதே வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.