வெளியிடப்பட்ட நேரம்: 14:27 (03/10/2018)

கடைசி தொடர்பு:13:53 (04/10/2018)

`பகலில் பானிபூரி; இரவில் கொள்ளை' - நேபாள இளைஞரின் வாக்குமூலம் 

 நேபாள கொள்ளை

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை, ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 30-ம் தேதி நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்ததாக ராயலா நகர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, காஸ் சிலிண்டர், கட்டிங் கருவி ஆகியவை வங்கியின் அருகில் கிடந்தன. இதன் விபரீதத்தைப் புரிந்துகொண்ட போலீஸார் வங்கியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆறு பேர் நள்ளிரவில் வங்கி வளாகத்தில் நடமாடும் காட்சிகளும் அவர்களின் கையில் காஸ் சிலிண்டர், கட்டிங் கருவிகளும் இருந்தன.

இதையடுத்து, அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தபோது நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், திருவொற்றியூரில் குடியிருக்கும் கணேஷ் பொகாடியாவும் அண்ணாநகரில் காவலாளியாகப் பணியாற்றும் நாரத் பொகாடியாவும் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. கணேஷ் பொகாடியா பானிபூரி கடையில் வேலை பார்த்துவருகிறார். அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்க முயன்ற மீதமுள்ள 4 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். 

கணேஷ் பொகாடியாவிடம் போலீஸார் விசாரித்தபோது, `பகலில் பானிபூரி விற்பேன். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் கொள்ளையடிக்கச் செல்வேன்' என்று கூறியுள்ளார். அதேபோல், நாரத் பொகாடியாவிடம் விசாரித்தபோது `காவலாளியாக பணியாற்றும் நான், சொகுசாக வாழ்வதற்காகக் கொள்ளையடிக்கச் சென்றேன்' என்று கூறியுள்ளார். இவர்கள் இருவர் கொடுத்த தகவலின்படி நேபாளத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு தப்பிவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், சென்னை போலீஸார் விரைவில் நேபாளத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.