வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (03/10/2018)

கடைசி தொடர்பு:14:58 (04/10/2018)

இந்த வார இறுதியில் புயலுக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 நாள்களுக்குத் தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் பேசுகையில், ``தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாகப் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. 

வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்கள் கன மழை பெய்யும். 2-ம் தேதிக்கு மேல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக்கூடும். இது 8-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. 

எனவே, அக்டோபர் 6,7,8 ஆகிய தேதிகளில் குமரிக் கடல், லட்சத்தீவு, தெற்குக் கேரளா, மத்தியக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதே போல் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறு வலியுறுத்தப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவித்தார்.