`ஆணையத்துக்கு 2 கோடி; இளவரசன் குடும்பத்துக்கு..?' - ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல் | Elavarasan Dead - Stunning RTI Information

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (03/10/2018)

கடைசி தொடர்பு:15:32 (03/10/2018)

`ஆணையத்துக்கு 2 கோடி; இளவரசன் குடும்பத்துக்கு..?' - ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்

ளவரசன் மரணத்துக்கு அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷனுக்கு செலவிடப்பட்டுள்ள தொகையின் விவரம் அதிர்ச்சியளிப்பதாக எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.

இளவரசன் மரணம்

தர்மபுரியைச் சேர்ந்த பட்டியல் இன இளைஞர் இளவரசன், 2013-ம் ஆண்டு மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். `இந்த மரணம் தற்கொலை' என்று ஒரு தரப்பினர் கூற, மற்றொரு தரப்பினர், `இது கொலை' என்று கூறினார்கள். இளவரசன் மரணம் மிகப்பெரிய சந்தேகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் தலைவராக நீதிபதியும் அவருக்கு செயலரும், ஒரு பிரிவு அலுவலரும் ஓர் உதவியாளரும் இரண்டு ஓட்டுநர்களும் மூன்று அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதுவரை இந்த விசாரணை ஆணையம் செய்த செலவு குறித்து எவிடென்ஸ் கதிர்தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டது மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பு. அதில், விசாரணை ஆணையம் இதுவரை செலவு செய்த தொகை ரூ.2,17,29,388 செலவிடப்பட்டுள்ளது. இவற்றில் சம்பளத்துக்கு மட்டும் ரூ.1,98,23,817 செலவும் இதரச் செலவினங்களுக்கு ரூ.19,05,571 செலவிடப்பட்டது தெரியவந்துள்ளது.

எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். ``இந்தச் செலவீனங்களைப் பார்க்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது. இறந்துபோன இளவரசனின் குடும்பத்தினருக்கு இதுவரையில் ஒரு ரூபாய் நிவாரணம்கூட கிடைக்கவில்லை. ஆனால், இளவரசனுடைய மரணத்தை விசாரிக்கக்கூடிய விசாரணைக் கமிஷனின் செலவு இரண்டு கோடிக்கும் மேல் தாண்டியிருக்கிறது.

 இதுபோன்ற விசாரணை ஆணையத்தின் முடிவுகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுத்ததில்லை. ஆனால், நியமிக்கப்படுகிற ஆணையங்களுக்கான செலவுகளாக கோடிக்கணக்கில் வழங்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கை நடத்தினால்கூட ஓரளவு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். இதுபோன்ற ஆணையம் நியமிக்கப்படுவதால், நீதிமன்றத்திலும் வழக்கை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. 1991-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் 45 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான விசாரணைக் கமிஷனின் முடிவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சாதகமாக அமைந்ததில்லை.

உரிய நீதியும் கிடைக்காமல் மக்களின் வரிப்பணத்தில் அதிக செலவையும் செய்துகொண்டிருக்கிற விசாரணைக் கமிஷன்கள் தேவையா என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அண்மையில் விசாரணைக் கமிஷனின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றார் வேதனையுடன்.