பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு | Green tribunel conduct general voting to peoples says anti sterlite movement

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (03/10/2018)

பசுமைத் தீர்ப்பாயம் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

"ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ரத்து செய்துவிட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என  ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை  பிறப்பித்து, சீல் வைத்து ஆலையை நிரந்தரமாக மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழு, கடந்த செப்டம்பர் 23-ம்  தேதி ஆலையில் ஆய்வு நடத்தியது. அன்று கருத்து கேட்பு கூட்டத்தில், பொது மக்களிடம் மனுக்களையும் பெற்றது. இந்த மாதம், வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் சென்னையில், மக்களிடம் கருத்து கேட்பதாகத் தெரிவித்திருந்தது.

இது குறித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தமிழ்மாந்தன், செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆய்வுக்குழுவில் இடம்பெறக்கூடாது என, வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. ஸ்டெர்லைட் ஆலையை, 2 மணி நேரத்தில் ஆய்வு செய்த இந்தக் குழு, பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான சட்ட விதிகளுக்குப் புறம்பாக, தனது நோக்கத்திலிருந்து விலகி, ஆலை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 600 கி.மீ தள்ளியுள்ள சென்னையில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்த உள்ளது. இதை ஆலைக்கு சாதகமான செயலாகவே பார்க்க முடியும். அதேபோல், ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள காற்று, நிலம் கடல்வளம், உப்பள பாதிப்பு பற்றி எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், மக்களிடம் மனுக்கள் பெற்று, அவர்களை ஏமாற்றி திசைதிருப்பும் வேலையைப் பார்க்கிறது. 

இந்த மனுகளைக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது எனத் தெரிந்தும் மக்களைத் தவறாக வழி நடத்துகிறது. எனவே, பசுமை தீர்ப்பாயம், இந்த ஆய்வுக் குழுவை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போல் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசாணை ஏற்புடையது இல்லை. அரசு ஆலை விஷயத்தில் தன்னுடைய இரட்டை வேஷத்தை கைவிட்டுவிட்டு, ஆலையை நிரந்தரமாக மூட சட்டசபையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க