வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (03/10/2018)

கடைசி தொடர்பு:13:52 (04/10/2018)

`என்னை அடையாளம் காட்டியது பரியேறும் பெருமாள்' - நெகிழும் எம்.ஏ.கே.ராமன்

 பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வராக நடித்த எம்.ஏ.கே.ராமன்

பரியேறும் பெருமாள் படத்தில் சட்டக்கல்லூரி முதல்வராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை நம்மிடம் கூறினார் எம்.ஏ.கே.ராமன்

திரைக்கு வந்த பரியேறும் பெருமாள் படத்தில்  சட்டக்கல்லூரி முதல்வராக நடித்திருப்பவர்  எம்.ஏ.கே.ராமன். கல்லூரியில் சேரும் ஹீரோ கதிரிடம் கல்லூரி முதல்வர் இன்டர்வியூ நடத்தும் காட்சியில் இடம்பிடித்துள்ள வசனம் படத்தின் ஹைலைட்டாக இருந்தது.

ஹீரோ கதிரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் அப்பா என்ன வேலைபார்க்கிறார், படித்து என்னவாகுவீர்கள் என்று முதல்வர் கேட்பார். அதற்கு கதிர், நான் டாக்டராகுவேன் என்று சொல்வார். அதைக்கேட்ட முதல்வர், டாக்டரா... இது சட்டக்கல்லூரி என்று சொல்லும்போது, சார், நீங்கள் நினைக்கிற மாதிரி நான் ஊசி போடும் டாக்டரல்ல... நான் சொன்னது டாக்டர் அம்பேத்கர் என்று கதிர் விளக்கமளிப்பார். 

சென்னை வேளச்சேரியில் குடியிருக்கும் எம்.ஏ.கே.ராமனை மாலை நேரத்தில் சந்தித்தேன். 66 வயதாகும் அவர் உற்சாகமாக நம்மிடம் பேசினார். 

 ``பன்னாட்டு நிறுவனத்திலும் மருந்து தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகுதான் நடிக்க ஆரம்பித்தேன். என்னுடைய சொந்த ஊர் கோழிக்கோடு பகுதியில் உள்ள மஞ்சேரி. நான் பார்த்த வேலைக்கும் நடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உதவி இயக்குநர் ஒருவரைச் சந்தித்தபோது அவர்தான் என்னை நடிக்க அழைத்துவந்தார். மேடை நாடகங்கள், சாமி 2, மலையாளப் படங்களில் நடித்துள்ளேன். டிவி சீரியல்களில் நடித்துவருகிறேன்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வம், இயக்கிய குறும்படத்தில் ஏற்கெனவே நடித்துள்ளேன். அதை வைத்துதான் எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பரியேறும் பெருமாள் படத்தில் சிறிய காட்சியில் வந்தாலும் அது, என்னை யாரென்று அடையாளம் காட்டியுள்ளது. நெல்லை இன்ஜினீயரிங் கல்லூரியில்தான் சூட்டிங் நடந்தது. படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இன்ஜினீயர் சுவாதி தொடர்பான நாடகத்திலும் நடித்துள்ளேன். சமூகம் தொடர்பான கதாபாத்திரங்களில் நடிப்பது மனநிறைவாக இருக்கிறது" என்றார்.