`பாதிக்கப்படுபவர்கள் மீதே பழி சுமத்துவதா?' - தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் கண்டனம் | 'To blame the victims' venkataraman slams Central Minister

வெளியிடப்பட்ட நேரம்: 08:18 (04/10/2018)

கடைசி தொடர்பு:08:18 (04/10/2018)

`பாதிக்கப்படுபவர்கள் மீதே பழி சுமத்துவதா?' - தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்த் தேசிய பேரியக்கம் கண்டனம்

விவசாயிகள் தங்களது எல்லைக் கோடுகளுக்குள் நின்றுகொண்டால், ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான்

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி டெல்லியில் கையெழுத்தானது. அப்பொழுது பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ‘’ ஹைட்ரோ கார்பன் எடுக்க பல்வேறு நிறுவனங்கள், சுமார் 6,000 கோடி முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். விவசாயிகள் தங்களது எல்லைக் கோடுகளுக்குள் நின்றுகொண்டால், ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.” என தெரிவித்திருந்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய கி.வெங்கட்ராமன் ``விவசாயிகள் தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் தற்காத்துக்கொள்ள நினைப்பது எல்லை மீறலா. விவசாயி தன் வீட்டின் தனது வயலின் எல்லைக்குள் நின்று போராடுவதே எல்லை மீறல் என்கிறார் தர்மேந்திர பிரதான். எரிவாயு எடுக்கும் திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளின் மீதே பழி போடுகிறார். விவசாயிகளை குற்றவாளிகள்போல் சித்திரிக்க முயல்கிறது பாரதிய ஜனதா அரசு. மத்திய அரசும், எரிவாயு நிறுவனங்களும்தான், விவசாயிகளின் நிலங்களுக்குள் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றன. விவசாயிகளின் அனுமதி பெறாமலே இவர்களது நிலங்களுக்குள் சென்று அளவீடு செய்கிறார்கள். எல்லைக்கல் பதிக்கிறார்கள். விவசாய நிலங்களில் ராட்சதக் கிணறுகள், குழாய்கள் பதிக்கிறார்கள். நிலங்களை முழுமையாகவும் அபகரித்தும் கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டில் இருந்தாலும்கூட, அகதிகளாகதான் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பழங்குடியின மக்களின் மீது இதுவரை தாக்குதல் நடத்தி வந்த பெரு நிறுவனங்கள், தற்பொழுது விவசாயிகள் மீதும் மீனவர்கள் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்துள்ளன” என கொந்தளித்தார்.