வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (04/10/2018)

கடைசி தொடர்பு:13:20 (06/10/2018)

``விவசாயிகள் அவர்கள் எல்லைக்குள் நின்றுகொண்டால் பிரச்னை இல்லை!" - சொல்கிறார் பெட்ரோலிய அமைச்சர்

இந்தக் கட்டுரையின் தலைப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், விவசாயிகளையும் கொந்தளிக்கச் செய்யலாம். ஆனால் என்ன செய்ய, இவையனைத்தும் அமைச்சரின் வார்த்தைகளே!

``விவசாயிகள் அவர்கள் எல்லைக்குள் நின்றுகொண்டால் பிரச்னை இல்லை!

மிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 1-ம் தேதி டில்லியில் கையொப்பமானது. அப்பொழுது பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ``ஹைட்ரோ கார்பன் எடுக்க பல்வேறு நிறுவனங்கள், சுமார் 6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். விவசாயிகள் தங்களது எல்லைக் கோடுகளுக்குள் நின்று கொண்டால், ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.” என அறிவுரை வழங்கியுள்ளார்.

இவர் சொல்வது சரிதானா... விவசாயிகள்தான் எல்லை மீறுகிறார்களா...மத்திய அரசும் எரிவாயு நிறுவனங்களும் மிகுந்த கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்கின்றனவா. இக்கேள்விகளுக்கு விடைகாண முற்பட்டால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் கொதித்தெழுகிறார்கள்.

கி.வெங்கட்ராமன்

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் ``விவசாயிகள் தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் தற்காத்துக் கொள்ள நினைப்பது எல்லை மீறலா? விவசாயி தன் வீட்டில் தனது வயலின் எல்லைக்குள் நின்று, போராடுவதே எல்லை மீறல் என்கிறார் தர்மேந்திர பிரதான். மத்திய அரசும், எரிவாயு நிறுவனங்களும்தான், விவசாயிகளின் நிலங்களுக்குள் அத்துமீறி நுழைகின்றன. விவசாயிகளின் அனுமதி பெறாமலே இவர்களது நிலங்களுக்குள் சென்று அளவீடு செய்கிறார்கள்; எல்லைக்கல் பதிக்கிறார்கள். விவசாய நிலங்களில் ராட்சத கிணறுகள், குழாய்கள் பதிக்கிறார்கள். நிலங்களை முழுமையாகவும் அபகரித்தும் கொள்கிறார்கள். விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டில் இருந்தாலும் கூட, அகதிகளாகத்தான் வாழ வேண்டும் என்ற நிர்பந்தத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பழங்குடியின மக்களின் மீது இதுவரை தாக்குதல் நடத்தி வந்த பெரு நிறுவனங்கள், தற்பொழுது விவசாயிகள் மீதும் மீனவர்கள் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளன.” எனக் கொந்தளித்தார்.

திருநாவுக்கரசு

தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு ``தர்மேந்திர பிரதானின் பேச்சு, எங்களது செவிப்பறையில் ஓங்கிஅறைந்தது போல் உள்ளது. திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குள் வந்து பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிராதனை பார்க்கச் சொல்லுங்கள். எரிவாயு நிறுவனங்களால் ஏராளமான விவசாய நிலங்கள் பாழாகிக் கிடக்கின்றன. இவர்களின் வசதிக்காகப் போடப்பட்ட நவீனச் சாலைகளால், மழைநீர் விவசாயிகளின் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாக மாறும் அவலம் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் கசிவினால், குடிநீர், காற்று, நிலம் அனைத்திலும் நச்சு உருவாகியுள்ளது. இதனால் பலவிதமான நோய்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள். எரிவாயு நிறுவங்களால் விவசாயிகள் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் என்றைக்குமே எல்லை மீறியது இல்லை.விவசாயிகளை குற்றவாளிகள் போல் சித்திரிக்க தர்மேந்திர பிரதான் முயல்கிறார்.” என வேதனையும் தெரிவித்தார்.

ஜெயராமன்

எரிவாயு நிறுவனங்களால் ஏற்கெனவே விவசாயிகள் சந்தித்துவரும் பாதிப்புகள் ஏராளம். அக்டோபர் 1-ம் தேதி தர்மேந்திர முன்னிலையில் போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக கவலை தெரிவிக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாள பேராசிரியர் ஜெயராமன். ``தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. 3 இடங்கள் என்றால், வெறும் 3 கிணறுகள் அல்ல. ஓ.என்.ஜி.சி-க்கு மரக்காணம் தொடங்கி, வேளாங்கண்ணி அருகே உள்ள  புஷ்பவனம் வரை உள்ள நிலப்பகுதியில் 731 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பல ஆயிரம் அடி ஆழத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ராட்சதக் கிணறுகள் அமைத்து, நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போகிறார்கள்.

வேதாந்தா நிறுவனத்துக்குத் தமிழ்நாட்டில் உள்ள கடல்பகுதியில் 2574 சதுர கிலோ மீட்டர் மற்றும் 1794 சதுர கிலோ மீட்டர் என இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேன், ஷேல் காஸ் அனைத்தையும் உள்ளடக்கியது. இவை நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள், மீனவர்கள் மட்டுமல்ல. அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இதுமட்டுமல்லாமல் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சீர்காழி அருகே உள்ள மாதானம் தொடங்கி ராமநாதபுரம் வரை 110 ராட்சதக் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் துறை அனுமதிக்காகக் காத்திருக்கிறது. ஏற்கெனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் ஓ.என்.ஜி.சி-யின் செயல்படுகளால் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அடியக்காமங்கலம், நரிமனம், கதிராமங்கலம் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் இதன் பாதிப்புகளை கண்கூடாகப் பார்க்கலாம். தண்ணீரில் ரசாயனத்தன்மை கலந்ததால் வெள்ளக்குடியில் உள்ள மக்கள் தோல் நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள். மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, ஓ.என்.ஜி.சி-யை காவிரிப் படுகையிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில்தான் உச்சகட்ட ஆபத்தாக, ஹைட்ராலிக் பிராக்சரிங்க் முறையில் இங்கு மீத்தேன், ஷேல் எடுக்கும் முயற்சியில் ஓ.என்.ஜி.சி இறங்கியுள்ளது. தற்பொழுது வேதாந்தா நிறுவனமும் இங்கு அடியெடுத்து வைக்கிறது." என்றார்.

இது ஒருபுறமிருக்க, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே இயங்கி வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளிலும் மீத்தேன், ஷேல் கேஸ் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தற்பொழுது அனுமதி அளித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் சேதுராமன் `1970 களிலிருந்து இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் 1997-ம் ஆண்டு, நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுப்பதற்கு முன்பாக, அதில் படிந்துள்ள மீத்தேனை எடுப்பதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட்டு வந்தாலும் கூட, 1998-ம் ஆண்டு இதற்கென விரிவான கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட்டு, இதில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. 2013-ம் ஆண்டு ஷேல் கேஸ் எடுப்பதற்கான கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட்டது.சேதுராமன்

இதில் ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய அரசு நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கவும், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒற்றை அனுமதிக் கொள்கை 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒற்றை அனுமதி வாங்கிவிட்டால் கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் கேஸ் என அனைத்தும் எடுத்துக்கொள்ளலாம். முன்பு போல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டியதில்லை. இன்னொரு முக்கிய அம்சமாகத் திறந்தவெளி அனுமதி கொள்கையும் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைத் தேர்ந்தெடுத்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஏலம் விடும். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறந்தவெளி அனுமதியின்படி இந்தியா முழுவதும் இயற்கை எரிவளம் நிறைந்துள்ள பகுதிகளின் விவரங்களை பெட்ரோலிய அமைச்சகம் வெளியிடும். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பான பகுதிகளை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும். இதனால் இயற்கை எரிபொருள்கள் எடுக்கும் பரப்பு மிக வேகமாக விரிவடைந்து கொண்டே போகும்.

மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை மக்கள் எதிர்ப்பதால், இதைச் சமாளிக்க திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து வகையான எரிபொருள்களையும் பெட்ரோலியம் என்றே அழைக்கலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. திறந்தவெளி அனுமதி கொள்கையின் அடிப்படையில் பெட்ரோலியம் எடுக்க முதல்கட்டமாகத் தமிழ்நாட்டில் 3 வட்டாரங்கள் உட்பட இந்திய அளவில் மொத்தம் 55 வட்டாரங்களுக்கு டெண்டர் விடப்பட்டன. இதற்கு 110 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அவை பரிசீலிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி இதற்கான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 2 வட்டாரங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு வட்டாரம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களுக்கான முன்னோட்டமாகவே இதைக் கருதுகிறோம்.

விவசாயிகள்

இதையெல்லாம் விட மிகப்பெரிய அபாயம் ஒன்றும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் ஒற்றை அனுமதிக் கொள்கை பொருந்தும் என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. காவிரிப் படுகையில் ஏராளமான இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அங்கெல்லாம் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலந்த நீரியல் கரைசல் மிகவும் அதிக அழுத்தத்தில் பூமிக்குள் செலுத்தப்படும். இதனால் மண் வளம், நீர் வளம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களுக்கு 2013-ம் ஆண்டு இடைக்காலத் தடையும் 2015-ம் ஆண்டு நிரந்தத் தடையும் விதிக்கப்பட்டது. மத்திய அரசின் தற்போதைய முடிவு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.” என்கிறார்.

இதுவரை விவசாயிகளின் வாழ்வாதாரங்களின் மீது அத்துமீறல் மட்டுமே நடைபெற்றது. ஆனால், இனி நடைபெற இருப்பதோ படையெடுப்பு என அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.


டிரெண்டிங் @ விகடன்