வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (04/10/2018)

கடைசி தொடர்பு:10:50 (04/10/2018)

`தமிழக அரசு வஞ்சித்துவிட்டது!’ - போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் விவசாயிகள் சங்கம் #Hydrocarbon

ஹெட்ரோகார்பன் திட்டம்


``ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அக்டோபர் 9-ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் ஆகிய நான்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், ``ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 19-ம் தேதி சிதம்பரத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்வதற்கு முன்பாக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழகத்தில் இத்திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர், இன்றுவரை சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தமிழகத்தில் தடைசெய்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தாலும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி அக்டோபர் 9-ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் ஆகிய நான்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதென்று சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி.அரசு, காவிரி டெல்டாவில் உள்ள வளங்கள் அனைத்தையும் சூறையாட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன என்பதை மக்களுக்குத் தெளிவுப்படுத்தக்கூட தமிழக அரசு முன்வரவில்லை. எனவே, நமது நிலவளம், நீர்வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்க நடைபெறும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் மீனவர்களும் பெருமளவு பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு அனைத்து அமைப்புகளின் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க