வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (04/10/2018)

கடைசி தொடர்பு:11:45 (04/10/2018)

``தலை குனிந்து நிற்கப்போகும் தி.மு.க..!’’ எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

``தலை குனிந்து நிற்கப்போகும் தி.மு.க..!’’ எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று பல அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை  தி.மு.க வெளியிட்டு வருகிறது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் இதுபற்றிப் புகார் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஒவ்வொரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை தி.மு.க நாடி வருகிறது. அந்த வகையில் இப்போது, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடுத்துள்ளது.

இதுகுறித்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் அமைச்சர் வேலுமணி உத்தரவுப்படியே அவர் கைகாட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளன.

எஸ் பி வேலுமணி, ஸ்டாலின்

எனவே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வருமான வரிச் சட்டம், கம்பெனிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபற்றி எல்லாம் விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்தப் புகாருக்கு ஆதரவாக ஏராளமான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இந்த மனு, உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க புகார் குறித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், ``தி.மு.க.வுக்குத் துணிச்சல் இருந்தால் நேரடியாக வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து அமைச்சர்களுக்கு எதிரான புகார்களை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்துவிசாரிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.வைப் பொறுத்தவரை கருணாநிதி இருந்த காலத்திலேயே மக்கள் அக்கட்சியை ஓரம் கட்டி விட்டார்கள். அவரும் நாள்தோறும் அறிக்கைகளை விடுத்து கழகத்தின் மீது சேற்றை வாரி எறிந்தார். ஆனால், ஊழலுக்காகவும், அராஜக செயல்களுக்காகவும், ஆடம்பர வெறியாட்டங்களுக்காகவும் மக்களால் வெறுத்து ஒதுக்கி மூலையில் ஒதுக்கி உட்கார வைக்கப்பட்ட தி.மு.க-வை மீண்டும் தலையெடுக்க மக்கள் விரும்பவில்லை. 

உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் 50 ஆண்டு கால வரலாற்றில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி அ.தி.மு.க என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். தி.மு.க தலையெடுத்தால் அராஜகமும், வன்முறையும் தலைவிரித்தாடும் என்று அக்கட்சியை ஒதுக்கினார்கள். அந்த ஆத்திரத்தில் தான் காலம் சென்ற கருணாநிதியும் சரி, இப்பொழுது அவரது வாரிசாக அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஸ்டாலினும் சரி, மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத தலைவர்களாக மாறி விட்டார்கள். அதன் எதிரொலியாகத்தான் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக ஊழல் ஊழல் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.டி.ஐ மூலம் விவரங்களை பெற்று வைத்துக் கொண்டு அத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை ஊழல் என்று தப்புக் கணக்கு போட்டு நீதித்துறையிடம் சரணடைந்திருக்கிறார்கள் தி.மு.க-வினர். அவர்களது முயற்சி புஷ்வாணமாகி விடும் என்பதுதான் உண்மை. எந்த டெண்டராக இருந்தாலும் இப்பொழுது நேரடியாக யாருக்கும் விடப்படுவதில்லை. அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகத்தான் விடப்படுகின்றன. அவ்வாறு டெண்டர்விடப்படும் போது அதில் யார் பங்கேற்கிறார்கள், யாருக்கு டெண்டர் விடப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. ஆட்சியில் இருந்தபோது ஊழலையே லட்சியமாகக் கொண்டு அரசு கஜானாவை காலி செய்து விட்டு சென்றவர்கள் இப்பொழுது பொய்யான ஒரு ஊழல் பட்டியலைத் தயாரித்து வைத்துக்கொண்டு இதன் மீது விசாரிக்கக் கோரி மனு கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் நீதிமன்றத்தின் முன் செல்லாக் காசாகி விடும் என்பதுதான் உண்மை. நீதி தேவதையின் முன்னால் அவர்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு தலை குனிந்து நிற்கத்தான் போகிறார்கள். தமிழகம் அதைப் பார்க்கத்தான் போகிறது’’ அறிக்கையில் கூறியுள்ளார்.

நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறதோ..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்