வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (04/10/2018)

கடைசி தொடர்பு:11:16 (04/10/2018)

'441' விஜயபாஸ்கர், 'வாரச்சந்தை' செந்தில்பாலாஜி, 'பைபாஸ் எம்.பி.' தம்பிதுரை! - கரூர் அரசியலை கலக்கும் 'பட்டப்பெயர்' வைபோகம்!

'441' விஜயபாஸ்கர், 'வாரச்சந்தை' செந்தில்பாலாஜி, 'பைபாஸ் எம்.பி.' தம்பிதுரை! - கரூர் அரசியலை கலக்கும் 'பட்டப்பெயர்' வைபோகம்!

இப்போதெல்லாம் அரசியல்வாதிகளைக் கதிகலங்க வைப்பது `மீம்ஸ்' கிரியேட்டர்கள்தாம். அரசியல்வாதிகளின் `டங்க் ஸ்லிப்பை', கப்பென்று தாவிப்பிடித்துச் சுடச்சுட அதை `மீம்ஸ்களாக்கி' சமூக வலைதளங்களில் உலவவிட்டு விடுகிறார்கள். ஆனால், கரூர் மாவட்ட அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க. கட்சிப் பிரமுகர்களைப் பொறுத்தமட்டில், பரஸ்பரம் மாற்றுக்கட்சி புள்ளிகளால் பட்டப்பெயர் வைத்து கலாய்க்கும் அரசியல் ஆரம்பித்திருக்கிறது. இங்குள்ள சமூக வலைதள பார்ட்டிகளிடம் `பேசு பொருளாக' மாறியிருக்கிறது இந்த `பெயர்சூட்டும்' அரசியல் விழா!

அ தி மு க

கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-விலிருந்து, இப்போது அ.ம.மு.க-வில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் எல்லா விஷயத்திலும் ஏழாம் பொருத்தம்தான். 2011-2016-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின், அமைச்சர் பதவியை கடைசிநேரத்தில் காலி செய்தது தம்பிதுரைதான். செந்தில் பாலாஜியை ஓரங்கட்ட கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததுடன், அவரை ஜெயிக்கவும் வைத்து, முன்னர் செந்தில்பாலாஜி வகித்த அதே போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். மேலும் அ.தி.மு.க-வின் கரூர் மாவட்டச் செயலாளர் பதவியையும் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குப் பெற்றுத்தந்தார் தம்பிதுரை. இந்த நிலையில்தான், சசிகலாவின் உறவினர் டி.டி.வி. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குத் தாவினார் செந்தில்பாலாஜி. அதன் பிறகு, செந்தில் பாலாஜி - தம்பிதுரை இடையேயான நிழல் யுத்தம் குடுமிப்பிடிச் சண்டை உச்சம் தொட்டது. அதன் விளைவுதான் இருவரும் மாறி, மாறி தங்கள் எதிரிக்குப் பட்டப்பெயர் சூட்டி பரபரப்பைக் கூட்டி வருகிறார்கள். 

இதுபற்றி கரூர் மாவட்ட அரசியலை உற்றுநோக்கி வரும் சிலரிடம் பேசினோம். ``டி.டி.வி.தினகரனை அழைத்து வந்து கரூரில் அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருந்தார் செந்தில் பாலாஜி. அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதற்குக் காரணம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்ட முட்டுக்கட்டைதான் என்று நினைத்தார் செந்தில்பாலாஜி. அதற்குப் பதிலடி கொடுக்க, கரூரிலேயே உழவர் சந்தைக்கு அருகில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தி அமைச்சர் விஜயபாஸ்கரை வறுத்தெடுத்தார் அவர். அதன் உச்சகட்டமாக, ``420 என்ற நம்பரை எதற்காகச் சொல்வோம் என்று தெரியும். அதுபோல், `இந்த மாவட்ட அமைச்சர் 441' " என்றார். எல்லோரும் புரியாமல் குழம்பி நிற்க, ``இவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால், இவரை மக்கள் பெரிதாக ஆதரிக்கலை. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 441 ஓட்டுகளில்தான், காங்கிரஸ் கட்சியின் பேங்க் சுப்ரமணியனிடம் ஜெயித்தார். அதனால், அவர் வெறும் 441-தான்" என்று போட்டுத் தாக்கினார் செந்தில் பாலாஜி. அந்தக் கூட்டத்தில் பேசிய சாதாரண நிர்வாகிகூட, `441 விஜயபாஸ்கர்' என்று பேசி விஜயபாஸ்கர் தரப்புக்கு பிரஷர் ஏற்றினார்கள். ஆனால், சில தினங்களில் அதே இடத்தில் பதிலுக்குப் பொதுக்கூட்டம் நடத்திய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், `நான் 441 ஓட்டுகளில் ஜெயிக்கக் காரணம் செந்தில் பாலாஜிதான். நான் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக சொந்தக் கட்சிகாரங்களையே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டுப் போடச் சொன்ன எட்டப்பன் அவர். அதனால், அவர் எட்டப்பன் செந்தில்பாலாஜி" என்று அதிரடியாகப் பேசினார். 

அ.தி.மு.க

இதற்கிடையே, மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரையைப் பற்றி செந்தில்பாலாஜி, `பைபாஸ் ரைடர் தம்பிதுரை' என்றார். ``4 முறை கரூர் தொகுதியில் எம்.பி, ஒரு முறை மத்திய அமைச்சர், மக்களவை துணை சபாநாயகர் என்று பல பெரிய பதவிகளை வகித்தாலும், சின்னச் சின்னதாகக்கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கரூருக்கு எந்தத் திட்டங்களையும் அவர் நிறைவேற்றவில்லை. வார இறுதிநாள்களில் பைபாஸில் வந்து பைபாஸிலேயே போய் விடுவார். அவர், பைபாஸ் ரைடர் மட்டுமே" என்று தாக்கிப் பேசினார். தொகுதி மக்களும் அதையே பின்பற்றி, `பைபாஸ் ரைடர்', `பைபாஸ் எம்.பி' என்று தம்பிதுரைக்குப் பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள். 

இந்நிலையில், செப்டம்பர் 20, 25 மற்றும் 27-ம் தேதிகளில் தன்னுடைய தொகுதியான அரவக்குறிச்சியில் 3 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுத்தார் செந்தில் பாலாஜி. தன் தொகுதிக்கு எந்தவொரு திட்டங்களையும் செயல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்று அறிவித்தார். என்றாலும் கரூர் மாவட்டக் காவல்துறை அந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாற்றுத் தேதிகளில் போராட்டம் நடத்த அனுமதி வாங்கினார். கரூர் எண்பதடி சாலையில் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``அரவக்குறிச்சி தொகுதிக்கு இந்த அரசு எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனால், செந்தில்பாலாஜி, `ஒண்ணுமே செய்யலை. உண்ணாவிரதம் இருக்கப் போறேன்'னு கிளம்பி இருக்கார். அவர் அரவக்குறிச்சி, க.பரமத்தி மற்றும் வேலாயுதம்பாளையம்னு 3 இடங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த 3 தேதிகளைக் குறிச்சிருந்தார். அந்த 3 நாள்களில் அந்த 3 இடங்களிலும் வாரச்சந்தை கூடும். `தனக்குக் கூட்டம் வராது. அ.ம.மு.க-வில் கரூரில் ஆள் இல்லை' என்ற பயத்தில் வாரச்சந்தை நடக்கும் நாள்களில் போராட்டத்தை நடத்தி, அந்த வாரச்சந்தைக் கூட்டத்தை தனக்கு வந்த கூட்டமாகக் காட்டிக்கொள்ள அதுபோன்று அறிவித்தார்" என்றதோடு, `வாரச்சந்தை அ.ம.மு.க', `வாரச்சந்தை செந்தில்பாலாஜி' என்ற ரீதியில் செந்தில்பாலாஜிக்குப் பட்டப் பெயர் வைத்து அழைத்தார். அதையே, கன்டென்டாக வைத்து அமைச்சர் தரப்பு, `மீம்ஸாக்கி' கரூர் மாவட்ட லோக்கல் வாட்ஸ்அப் குழுக்களில் பரப்பியது. `இப்படிப் பல்வேறு தரப்பினரும் ஆளாளுக்குப் `பட்டப் பெயர்' வைப்பதற்கே நேரம் ஒதுக்குவதால், நலத்திட்டப் பணிகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன' என மக்கள் குமுறுகிறார்கள். ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டு இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த மக்கள், இவர்களுக்கு மக்கள் `நண்டு அரசியல்வாதிகள்'னு பட்டப்பெயர் வைத்து அழைக்கிறாங்க" என்றனர் ஆதங்கத்துடன்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை, செந்தில் பாலாஜி

இதுபற்றி, செந்தில்பாலாஜி தரப்பில் பேசினோம். ``நாங்கள் முதலில் ஆரம்பிக்கவில்லை. அ.தி.மு.க நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், எடப்பாடிக்கு முன்பு செந்தில் பாலாஜியை எட்டப்பன் என்று பெயர் வைத்தது எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான். அதனால்தான், அமைச்சர் தொகுதியில் வெறும் 441 ஓட்டுகளில் மட்டுமே ஜஸ்ட் பாஸானதைக் குறிப்பிட்டுப் பேச நேர்ந்தது. ஆனால், `வாரச்சந்தை செந்தில்பாலாஜி' என்று குறிப்பிட்டதை ஏற்க முடியாது. இந்த ஆட்டத்தைத் தொடங்கியதே அமைச்சர்தான். எனவே, அவங்க பதறக்கூடிய அளவுக்கு மீண்டும் ஏதாவது செய்து, சமூக வலைதளங்கள் மூலம் அதைப் பெரிதாக்குவோம்" என்றார்கள் அதிரடியாக.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசியபோது, ``அமைச்சரை 441-என்று கேவலமாப் பேசியது செந்தில்பாலாஜிதான். அமைச்சரை விடுங்கள். அ.தி.மு.க-வில் மூத்தவர், அரசியலில் அனுபவம் மிக்கவர் தம்பிதுரை. அவரைப் பற்றி `பைபாஸ் எம்.பி'ன்னு அவதூறு பரப்புறாங்க. இந்த விசயத்தை இத்தோடு விட்டுவிட்டால் செந்தில் பாலாஜிக்கு நல்லது. இல்லை என்றால், அவர் 8 அடி பாய்ந்தால், நாங்கள் 16 அடி பாய்வோம்" என்றார்கள் பதிலடியாக.


டிரெண்டிங் @ விகடன்