வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (04/10/2018)

கடைசி தொடர்பு:12:18 (04/10/2018)

`ஆக்கிரமித்துள்ள நிலத்தை ஒப்படையுங்கள்!’ : சாஸ்த்ரா பல்கலைக்கு எதிராக சமூக ஆர்வலர் போர்க்கொடி

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அரசுக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இதை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை ஒப்படைக்க, வட்டாட்சியர் வழங்கியிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

தமிழக அரசு உடனடியாக அந்த நிலத்தை மீட்க வேண்டும் எனத் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ஜீவக்குமார் வலியுறுத்துகிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜீவக்குமார் ``எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பின் பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கைதிகளை திருத்தக்கூடிய திறந்தவெளி சிறைச்சாலை காட்சி இடம்பெற்றது. குற்றம் செய்தவர்கள் சமூகத்தில் திருந்தி வாழ வேண்டும் என்றால் அதுபோன்ற சிறைச்சாலை அவசியம் என்ற எண்ணம் அப்பொழுது எம்.ஜி,ஆருக்கு உருவெடுத்தது. தமிழக முதல்வராக அவர் பதவி வகித்தபோது, தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்ற தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான இந்த 58 ஏக்கர் நிலத்தைதான் அவர் தேர்வு செய்திருந்தார்.

சில காரணங்களால் அத்திட்டம் காத்திருப்பில் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த இடத்தை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துவிட்டது. 58 ஏக்கர் நிலத்தில் 28 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலம் சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானதல்ல என்பது ஆணித்தரமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு கூட தமிழக அரசு இந்த நிலத்தை மீட்காமல் கால தாமதம் செய்துகொண்டே இருக்கிறது. பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் எனக் காட்டிக்கொள்வதற்காகவே, பல்கலைக்கழக நிர்வாகம், ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகளை பல்கலைக் கழகத்துக்குள் நடத்தியது. இதனால் தமிழக ஆட்சியாளர்கள், நிலத்தை மீட்க துணிச்சல் இல்லாமல் பயந்து கிடக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் பல நூறு கோடி ரூபாய் விலை மதிப்புடையது. ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்துகிறார்.